கிழக்கில் உள்ளுர் விமான சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை - உதுமாலெப்பை எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்


அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் உள்ளுர் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போது திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து நடத்தப்பட்ட உள்ளுர் விமான சேவைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அச்சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் கிழக்கு மாகாண மக்களும் உல்லாச பயணிகளும் பெரிதும் பயனடைவர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இச்சமயம் உதுமாலெப்பை எம்.பி மேலும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தின்  பொருளாதார மேம்பாட்டுக்கும் உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த விமான சேவை பெரிதும் பங்களிக்கும். அத்தோடு இம்மாகாணத்தை சேர்ந்த மக்கள் அவசர தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு பயணங்களை மேற்கொள்ளவும் குறிப்பாக திடீரென நோய் வாய்ப்படுபவர்களை அவசர சிகிச்சைகளுக்கென கொழும்பு வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லவும் இச்சேவை அதிகளவில் நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்த இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, இந்த மாவட்டங்களுக்கான உள்ளுர் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக  தனியார் விமான நிறுவனங்கள்  தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

விமான நிலைய தலைவர் அருண ராஜபக்ச கூறுகையில், இரத்மலானையிலிருந்து அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான உள்ளூர் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் அமைச்சர் அநுர கருணாதிலக்க, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான உள்ளூர் விமான சேவையினை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.