இலங்கையில் 16 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட,143 சர்வதேச விருதுகளை அள்ளிய திரைப்படத்தின் விருது வழங்கல்


இயக்குநர்,தயாரிப்பாளர்,நடிகர் என பல்துறை கலைஞராகவுள்ள தேவா அலோசியஸ் அவர்களின் 25-வது படைப்பான 'சாவடி' திரைப்படத்தின் வெற்றிகரமான 300-வது நாள் கொண்டாட்டமும், படக்குழுவினருக்கான விருது வழங்கும் நிகழ்வும், அத்துடன் 'துவக்கு' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழாவும் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தாழங்குடா பிசிஏ திரையரங்கில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரபல திரைப்பட இறக்குமதியாளரும், சங்கவி தியேட்டர்ஸ் மற்றும் சங்கவி ஃபிலிம்ஸ் நிறுவனருமான துரைராசா சுரேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார். 

தேவா சினி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தேவா அலோசியஸ் தயாரிப்பில் உருவான 25ஆவது திரைப்படமான ‘சாவடி’, இலங்கைத் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த திரைப்படமாக திகழ்கிறது.

இலங்கையில் 16 திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு இதுவரை 143 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில், ‘சாவடி’ திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது தேவா அலோசியஸ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த முழுநீள திரைப்படமான ‘துவக்கு’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீடும் இதே நிகழ்வில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் திரையுலக பிரபலங்கள், கலைஞர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான சினிமா ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.