திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்த மாவட்ட டெங்கு பணிக்குழுவின் விசேட கூட்டம் இன்று (30) நடைபெற்றது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையவழி மூலமும் கலந்து கொண்டனர்.
டெங்கு வைரஸின் புதிய வகைகள் பரவி வரும் நிலை, நோய் எதிர்ப்புச் சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் Aedes aegypti கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்ல; அனைத்து அரச நிறுவனங்களும், உள்ளூராட்சி அமைப்புகளும், பாதுகாப்புத் தரப்பினரும், பொதுமக்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேசியப் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், கொசுக்கள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றுதல், கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்தல், சுற்றுப்புறத் தூய்மையை தொடர்ச்சியாகப் பேணுதல், வீடு தோறும் மற்றும் நிறுவன மட்டங்களில் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துதல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.







