நேற்றய தினம் மாத்திரம் வீதி விபத்தில் 6 பேர் பலி!

நேற்று (07) ஒரு நாளில் மாத்திரம் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை சாரதிகளின் கவனக்குறைவு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிக்கவெரட்டிய பகுதியில் பாதசாரியான வயோதிப பெண் ஒருவர் மீது லொறி ஒன்று மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மெல்சிறிபுர, ஹல்மில்லேவ பகுதியில் பாடசாலை வேனில் இருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற 11 வயது சிறுவன், லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

காலி – ஹிக்கடுவ நகருக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கான்கிரீட் தூண் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார். அத்துடன், இந்த காரில் மோதி மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளார்.

மஹாஓயா, எஹலகஸ்பல்லம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிச்சென்ற 19 வயது இளைஞன், வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதகில்  மோதியதில் உயிரிழந்துள்ளார்.

கிரிஉல்ல, தம்பதெனிய பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதுடன், பின்னால் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

இரத்தினபுரி, மாஹிங்கொட பகுதியில் பாதசாரி ஒருவர் மீது பஸ் ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் எல்லாவல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.