அம்பாறை – உஹனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பெலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (20) மதிய நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உஹனை, தெமடமல்பெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பர்னாட் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் உஹனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அம்பாறை வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் கீழும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி. கஸ்தூரி ஆரச்சி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திஸாநாயக்க ஆகியோரின் மேற்பார்வையில், உஹனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.