பாடசாலைக்கு மட்டுமல்ல மாவட்டதுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

 

எமது மாணவர்கள் தேசிய ரீதியான போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெறுவதென்பது பாடசாலைக்கு மட்டுமல்ல மாவட்டதுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு யாழ் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தினால் 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைப்பதாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்ற தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் தலைவி திருமதி. மதனரூபி நிரோஷானந்

அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (14.05.2026 )பி.ப. 02.00 மணிக்கு
யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபர் திரு. தில்லையம்பலம் வரதன் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் திருமதி தயாபரி கிரிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சத்தியப்பிரியா கிருஸ்ணகுமார், AVR. அறக்கட்டளையின் தலைவர் திரு. பொன்னுத்துரை சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில், தெல்லிப்பளை பிரதேசத்துக்கு ஒரு மகிழ்வான நாளாக இன்றைய நாள் அமைந்திருப்பதாகவும், இக் கல்லூரியில் இருந்து இரண்டு உதைபந்தாட்ட பெண்கள் அணிகளும் இறுதிப் போட்டி வரை பங்குபற்றியதன் மூலம் மண்ணினுடைய பெருமையை உலகறிய செய்யும் நிகழ்வினை பாடசாலை அதிபர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து அறிய முடிகிறது என்பதை குறிப்பிட்டதுடன், தேசிய ரீதியாக நடைபெற்ற உதைப்பந்தாட்ட பெண்கள் பிரிவில் 32 போட்டிகளில் யூனியன் கல்லூரி 15 வயதுக்குட்பட்ட மாணவிகள் பங்கு பற்றி தேசிய ரீதியில் முதலாமிடம் பெறுவது என்பது மிகவும் கடினமான விடயம் எனவும், இதற்கு அவர்களின் மன உறுதியே வெற்றியை பெற வைத்துள்ளது எனவும், தேசிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் போது அவர்கள் கல்வியில் நாட்டம் இல்லாமல் இருக்கின்றார்கள் என ஐயப்படும் நிலையே இன்றைய சூழலில் காணப்படுகின்ற நிலையில், அவர்கள் வெற்றியை தாங்கி நிற்கும் போது பெற்றோர்களின் மகிழ்ச்சி என்பது உண்மையில் அளவிட முடியாததொன்றாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனம் மாவட்ட ரீதியாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ள நிலையில் இன்று பிரதேச செயலக ரீதியாக அவர்களுடைய பணியை ஆரம்பித்துள்ளார்கள் எனவும், மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனம் பெண்களை கௌரவிக்கின்ற நிகழ்வினை பிரதேச செயலக ரீதியாக அங்குரார்ப்பணம் செய்கின்ற நிகழ்வாக இந் நிகழ்வு பார்க்கப்படுகின்றது எனவும். தெரிவித்தார். மேலும் பிள்ளைகளுடைய உதை பந்தாட்ட அணியில் பயிற்றுவிப்பாளராக பொலீஸ் உத்தியோகத்தரும் பயிற்சி வழங்கியிருப்பது பாராட்ட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது. மேலும், விளையாட்டில் மட்டுமின்றி கல்வி மட்டத்திலும் இம் மாணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற வேண்டியவர்களாக இருப்பதாகவும் ஏனென்றால் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் என்பதே பெற்றோர்களின் பெரும் அவாவாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், விளையாட்டுடன் கூடிய வெற்றியை குடும்பத்துடன் கொண்டாட கல்வியிலும் சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் அதற்கு அவர்களுக்கு இறைவன் துணை புரிய வேண்டும் எனவும், மேலும் தேசிய ரீதியாக பல்வேறுபட்ட போட்டிகளில் எவ்வித வசதிகளும் இன்றி பங்கு பற்றி வெற்றியை பெற்றுக் கொள்கின்றார்கள் எனத் தெரிவித்தார். தேசிய ரீதியான போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெறுவதென்பது பாடசாலைக்கு மட்டுமல்ல மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது எனவும், பிள்ளைகள் எதிர்கால வளர்ச்சியில் அக்கறை காட்டுவதோடு இத்தகைய உதைப்பந்தாட்ட போட்டிகளில் செயற்பட்டு தொடர்ச்சியாக முன்னேற்றம் காண்பதன் ஊடாக மாவட்ட , மாகாண, தேசிய ரீதியில் அணிகளில் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பல்வேறுபட்ட வீராங்கனைகள் இம் மண்ணிலே உருவாகி தேசிய ரீதியாகவும் விளையாட்டுக்களில் பங்குபற்றும் வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய உதைப்பந்தாட்ட அணிகளில் அங்கத்தவர்களாக பங்குபெறக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும், 15 வயதுக்குட்பட்ட மாணவிகளின் அணி அடைந்த வெற்றிக்கு யூனியன் கல்லூரி அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், யூனியன் கல்லூரி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் யாழ்ப்பாண மாவட்டம் பெருமைப்படுகின்ற நிகழ்வாக இந் நிகழ்வு அமைந்திருக்கின்றது எனவும் சாதனைப் பயணங்கள் மென்மேலும் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களின் இன்னியம் அணிவகுப்புடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் வீராங்கனைகளுக்கு பொன்னாடை மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் சம நேரத்தில் அவர்களுடைய தாய்மாரும் வுருந்தினர்களால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளன அங்கத்தவர்கள், பாடசாலை பிரதி உப அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.