வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 200மில்லியன் ரூபா ஒதுக்கீடு - பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 200மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களை பூர்த்திசெய்ய அதிக நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்துக்குழு கூட்டம் இன்று பிரதேச செயலாளர் திருமதி ந.ஒழுங்கமைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் மற்றும் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் தவிசாளர் கோபாலரட்னம் உட்பட திணைக்கள தலைவர்கள்,சமூக மட்ட பொது அமைப்புகள்,கிராம சேவையாளர்கள்,சமுர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்,வீடமைப்பு திட்டங்கள்,பாடசாலைகளின் புனரமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகள் காணப்படுவதாகவும் அவற்றில் ஆயித்தியமலை பொலிஸார் கசிப்பினை கட்டுப்படுத்த ஓரளவு சிறப்பாக செயற்படுகின்றபோதிலும் வவுணதீவு பொலிஸாரின் செயற்பாடுகள் கடும் மோசமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு கசிப்பு கொண்டுசென்று வியாபாரம் செய்யுமளவுக்கு கசிப்பு உற்பத்தி வவுணதீவில் கொடிகட்;டிப்பறப்பதாகவும் இது தொடர்பி பலமுறை தெரியப்படுத்தியும் பொலிஸார் முறையாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லையெனவும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்காவிட்டால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் எச்சரித்தார்.
இதன்போது வவுணதீவு பிரதேச செயலப்பிரிவில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன் இதனை தடுப்பதற்கு பொலிஸாரினை விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவிறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெறும் யானை-மனித மோதல்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் யானை மனித மோதலை தடுக்கும் வகையில் பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுப்பாட்டு கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் யானைவேலிகளை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,
இன்றைய தினம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலே பல பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை முன்னால் நாங்கள் ஆராய்ந்திருந்தோம். இந்த பிரதேசத்திற்கு மாத்திரம் 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மிக நீண்ட காலமாக மக்களின் தேவையாக இருந்த வீட்டுத்திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 10 வருடத்திற்கும் மேலதிகமான காலமாக இவர்கள் இந்த வீட்டுத்திட்டத்திற்கென நிதியினை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். சஜித் பிரேமதாச அவர்களின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட இந்த மாதிரி வீட்டுத்திட்டம் இடைநடுவே அவரது காலத்திற்கு பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் யாருமே எங்கள் மக்களை இது கொண்டு பார்க்கவில்லை, கண் கொண்டு பார்க்கவில்லை.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் 10 வருடத்திற்கு பின்னர் இந்த வீட்டு மாதிரி வீட்டுத்திட்டத்திற்கான நிதிகளை நாங்கள் ஒதுக்கியிருக்கின்றோம். வவுணதீவு பிரதேசத்திலே அதிகமான வீட்டுத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்டிருந்தது. அதற்காகக்கூட இம்முறை நாங்கள் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
அதேபோன்று டிட்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதிலே அவர்களது வீட்டு பாதிப்புக்கான நிதிகளையும் வழங்கியிருக்கின்றோம். தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் கூட அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்கியிருக்கின்றோம். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து பிரதேசங்களிலும் தங்களது மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக முன்முனைப்பாக நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மாவட்டத்திற்கென அதிகளவான நிதிகள் இம்முறை 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாண சபையின் ஊடாக மண்முனை மேற்கு பிரதேச சபைக்கும் கூட 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே தொடர்ச்சியாக அபிவிருத்தி செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோன்று இந்த பிரதேசத்திலே தொடர்ச்சியாக யானை-மனித மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. யானைகள் அங்கே சென்று மக்களை வதைக்கின்றதும் விவசாயிகளை துன்புறுத்துவதுமாக இருந்து கொண்டிருந்தது. அவர்களின் பெறுமதியான சொத்துக்களும் இழக்கப்பட்டு கொண்டிருந்தது. அதற்காக விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆறு பிரதேச செயலகங்களிலே யானைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு கண்ட்ரோல் யூனிட் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆறு பிரதேசங்களிலே 10 பேர் கொண்ட அணியாக உருவாக்கப்பட்டு அவர்களுக்கான இட ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக யானை-மனித மோதலை தடுப்பதற்கான ஒரு முன்னெடுப்புகளை நாங்கள் முன்னிறுத்தியிருக்கின்றோம். அதனைப் போன்று யானை வேலி அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.
அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகின்ற ஒரு முக்கியமான ஒரு விடயம், விவசாயிகளுக்கான உரத்திற்கான நிதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது ஆனால் அவர்களுக்கான உரம் கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகின்றது. ஆகவே இது தொடர்பாக எங்களது அமைச்சருடனும் அதேபோன்று திணைக்களத் தலைவர்களின் கவனத்திற்கும் நாங்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றோம்.
ஆகவே வெகு விரைவிலே அந்த உரப் பிரச்சினைக்கான ஒரு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த விவசாயிகள் அந்த விவசாய நடவடிக்கைகளை சரிவர கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும். மீண்டும் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது, கடந்த காலங்களிலே உரத்திற்கான மானியத் தொகை மிகக் குறைவாக வழங்கப்பட்டிருந்தது ஆனால் இம்முறை அதிகமான தொகையினை அரசாங்கம் மானியமாக வழங்கியிருக்கின்றது.
ஆகவே அரசாங்கம் எப்போதுமே இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நேயமிக்க அரசாங்கம் என்பதை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். விவசாயிகளுக்காகவும் மீன்பிடியாளர்களுக்கும் ஏனையோருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் எங்களது அரசு மேற்கொள்ளும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மட்டக்களப்பு மாவட்ட மக்களும் எங்கள் மக்கள், ஆகவே இந்த மக்களுக்கான அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.