தென்னிலங்கை எம்மை ஏமாற்றிக்கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பயணிக்கவேண்டிய அவசியம் -சிறிநாத் எம்.பி.


காலங்கள் கடந்தாலும் தென்னிலங்கை தேசியவாதம் எம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், எமக்கான விடுதலைக்கான தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலே நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்பு, அதற்கு முன்னராகத் தமிழ் மக்கள் தங்கள் இன விடுதலைக்காகப் பல்வேறு பட்ட வகையிலே போராடி உரிமைகளுக்காகப் பயணித்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலே அன்றைய காலகட்டங்கள் அகிம்சை ரீதியாகவும் ஆயுதப் போராட்ட வரலாறு ரீதியாகவும் போராடிக் கொண்டு வந்த சூழலிலே, ஆயுதப் போராட்ட வரலாறு வலுப்பெற்றுத் தமிழ் மக்களுக்கான ஒரு உருவெடுத்திருந்த அல்லது வலிமையாக இருந்த சந்தர்ப்பத்திலே, பிராந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக அவர்கள் எவ்வாறு சுதந்திரம் பெற்றுக்கொண்டார்களோ, அதை நினைவுபடுத்தி அவ்வாறான ஒரு வழியிலே தமிழ் மக்களுக்காக ஒரு மிதவாத அடிப்படையில் அகிம்சை வழியிலே போராடிய எங்களுடைய அன்னை பூபதி அவர்களின் தியாகதீபம் தாயவர்களின் நினைவினை இந்த நாளில் நினைவுகூறுகின்றோம்.

உண்மையிலே நாங்கள் என்ன செய்தியை இந்த மக்களுக்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம்? நாங்கள் வரலாற்றிலே ஒடுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப்பட்ட இனமாக வந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்திலே, நாம் பல வகையிலும் எமது மக்களுக்காக எமது தமிழ்த் தேசியத்திற்காகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் தனியே தீவிரவாதப் போராட்ட அல்லது ஆயுதப் போராட்ட வரலாற்றில் மட்டும் பயணித்தவர்கள் அல்ல. தமிழ் மக்களுக்காக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பல விட்டுக்கொடுப்புகளுடன், உயிரிழப்புகளையும் உடைமைகளையும் இழந்து தங்கள் மிதவாதப் போராட்டங்களையும் வரலாறு காணாத வகையிலே செய்திருக்கின்றார்கள்.

அந்த வகையிலே உண்மையிலே ஒரு நெஞ்சுரத்துடன் மிதவாத அகிம்சை வழியிலே போராடுவது என்றால், ஒரு மிகப்பெரிய பொறுமையும் மிகப்பெரிய நிதானமும் மிகப்பெரிய உறுதியும் வேண்டும். அந்த வகையிலே விடுதலைப் போராட்ட காலத்திலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அல்லது தமிழ் மக்களின் தேச விடுதலைக்காக, தமிழ் மக்களின் தேசியத்திற்காக அன்னை பூபதி அவர்கள் தனது இன்னுயிரை மிக ஒரு அரும்பெரும் தியாகத்துடன், ஒரு மிகத் துணிவுடன் தனது சேவையைத் தமிழ் மக்களுக்காக வழங்கியிருந்தார்.

அவருடைய தியாகம், அவருடைய உயிர் துறப்பு என்ன சொல்கின்றது? தமிழ் மக்களுக்காகத் தொடர்ச்சியாக நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்தின் வழியிலே பயணிக்க வேண்டும். அது எந்த வகையான விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் நாம் எமது தமிழ்த் தேசியப் பாதையிலிருந்து விலகாமல், தமிழ்த் தேசியத்திற்காக அர்ப்பணிப்புடன் தமிழ் மக்கள் பயணியுங்கள் என்ற செய்தியை அவர் எங்களுக்குத் தந்திருக்கின்றார்.

அந்த வகையிலே இன்றும் பல நெருக்கடிகளைச் சமகாலத்திலே நாம் எமது தாயக நிலம் சம்பந்தமாகவும் தமிழ்த் தேசியம் சம்பந்தமாகவும் பல நெருக்கடிகளைச் சந்தித்திருந்தாலும், தமிழ் மக்கள் மிக நெஞ்சுறுதியுடனும் மிக ஒரு ஓர்மையுடனும் போராட வேண்டிய சந்தர்ப்பம் இருக்கின்றது. காலங்கள் கடந்தாலும் தென்னிலங்கை தேசியவாதம் எம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், எமக்கான விடுதலைக்கான தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலே நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அன்னையின் அந்த அர்ப்பணிப்புக்காக நாம் அந்த விடயத்திலே ஒன்றுபட்டு, கட்சிகளின் பேதம் மறந்து தமிழ்த் தேசியத்திற்காக நாம் இன்று ஒன்று சேர்ந்திருக்கின்றோம். மிக முக்கியமாக இன்று அந்த ஊர்தியை நீங்கள் கொண்டு வந்திருக்கின்றீர்கள், இந்த பிரதேசம் எங்கும் அந்த செய்தியைத் தமிழ் மக்களுக்கும் இளம் சந்ததியினருக்கும் கொண்டு சென்றிருக்கின்றீர்கள். உண்மையிலே அந்த விடயத்திலே நான் உங்களைப் பாராட்டுகின்றேன். கடந்த பல வருடங்களாக நீங்கள் இந்த அர்ப்பணிப்பான செயலை, வருகின்ற இளம் சந்ததியினருக்கு இந்த செய்தியை நீங்கள் கொண்டு செல்கின்றீர்கள்.

வருகின்ற இளம் சந்ததியினருக்கு தமிழ்த் தேசியம், தமிழ் விடுதலை, தமிழ் மக்களின் பாரம்பரியம், தமிழ் மக்களின் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விடயங்களை உறுதியான வகையிலே கொண்டு செல்வதற்கான இந்தத் தாயகச் செயலணியின் செயற்பாடுகளை நாம் உண்மையாகப் பாராட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு அப்பால் இந்த இடத்தை நாம் மிகவும் புனரமைப்பு ரீதியாக மக்கள் வந்து வழிபடுகின்ற, அஞ்சலி செலுத்துகின்ற இடமாக மாற்றியமைக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அதற்கு அப்பால் எமது தமிழ்த் தேசியத்தின் ஞாபகார்த்தங்களை அல்லது அந்த அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய இடமாக இருக்கின்றது. இதற்காகச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நானும் அதற்குச் சகல வழியிலும் ஒத்துழைப்பு வழங்குவேன்.

எமது தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் ஞாபகார்த்தம், அவருடைய அர்ப்பணிப்பு, அவருடைய செயற்பாடு அடுத்த சந்ததியினருக்கு எமக்கு, எமது இனத்துக்கான விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு தியாகமாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கு நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.