பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறு ஈழத்தமிழ் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்று, இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என்பதைக் குறிக்கும் வகையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றது.
இப்பேரணியானது, பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆரம்பித்து, லண்டனின் trafalgar சதுக்கம் வரை நகர்ந்து, பிரித்தானிய மன்னரை நோக்கி பிரித்தானிய மன்னர் மாளிகை வரை மக்கள் பேரலையாக முன்னேறி நிறைவடைந்தது. “தமிழீழமே ஒரே தீர்வு” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, பேரணி முழுவதும் எழுச்சிமிகு முழக்கங்கள் எழுப்பப்பட்டன
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி அதிகாரம் ஆகிய அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழ தன்னாட்சி அதிகாரமே தமிழருக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தியவாறு, இந்த கறுப்பு நாள் பேரணி பேரெழுச்சியுடன் நடைபெற்றது



