கிராமிய பாரம்பரிய தையல் மற்றும் கைமுறை கைவினை தொடர்பிலான உற்பத்தி பொருட்களை கொண்ட கண்காட்சி தம்பலகாமம் பிரதேச செயல பிரிவின் புதுக்குடியிருப்பு பெண்கள் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நேற்று (21) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களமும், தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய குறித்த கண்காட்சியை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) தம்பலகாமம் பிரதேச செயலாளருமான ஜெ.ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஹமீம் உட்பட உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட தையல் போதனாசிரியர், பயிற்சி நிலைய தையல் போதனாசிரியை என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தையல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஆடை உற்பத்தி, அலங்கார பொருட்கள் என தங்களால் உருவாக்கப்பட்ட உற்பத்திகளை இதன் போது காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தங்களது உற்பத்திகளை இணைய வழி சந்தைப்படுத்தல் ஊடாக தேசிய மற்றும் வெளிநாட்டுக்காக சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை பெற்று இத் துறையில் தங்களை வளர்த்துக் கொள்ள இவ்வாறான பயிற்சி திட்டம் ஊடாக முயற்சிக்க வேண்டும். நாம் சாதனை பெண்களாக மாறும் அளவுக்கு இதனது உற்பத்தி துறைகளை ஆடைத் தொழில் துறை கைப்பணி துறை என பல உற்பத்திகள் ஊடாக தயார்படுத்தி முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.







