தேசிய மட்டத்தில் சாதனை: மட்டக்களப்பு களுவன்கேணி பாரதி இளைஞர் கழக எல்லே வீரர்களுக்கு வரவேற்பு!



(செங்கலடி நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவன்கேணி பாராதி இளைஞர் கழக எல்லே அணியினர் தேசிய மட்டத்தில் 4ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்ததையடுத்துஇ அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று களுவன்கேணி பாராதி விளையாட்டு மைதான அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த களுவன்கேணி பாராதி இளைஞர் கழக எல்லே அணியானதுஇ 28 வயதிற்குட்பட்ட எல்லே விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்கேற்றுஇ நான்காம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்கும் தமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.


இதில் சாதனை படைத்த வீரர்களை வரவேற்கும் கௌரவிப்பு நிகழ்வு களுவன்கேணி பாராதி விளையாட்டு மைதான அரங்கில் மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டோர் உற்சாகத்துடன் வீரர்களை வரவேற்றனர்.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் க.லோகேந்திரன், செங்கலடி பிரதேச செயலக கணக்காளர் டிலானி ரேவதன், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் ர.விஜித்குமார், ஏறாவூர் பற்று செங்கலடி இளைஞர் சேவைகள் அதிகாரி பா. கிஸ்கந்தமுதலி, விளையாட்டு உத்தியோகத்தர் அனுஜன், களுவன்கேணி கிராம உத்தியோகத்தர் ம.மயூரிகா, அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெயாந்தினி, களுவன்கேணி விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் தே.பிரார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.

 தொடர்ந்து அதிதிகள் உரை நிகழ்த்திய பின்னர், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள், இளைஞர்கள், கழக வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று வீரர்களின் சாதனையைப் போற்றிப் பாராட்டினர்.