மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது? தவிசாளர் பிரேரணையை தள்ளுபடி செய்தார்!
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை, மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரயோகித்து அதனை தவிசாளர் தள்ளுபடி செய்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தளவாய் செங்கலடி வட்டார உறுப்பினர் செ.நிலாந்தன் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், NPP உறுப்பினர்கள் , மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தவிசாளர் குறித்த பிரேரணையை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நீக்குவதாக தெரிவித்தார்.
மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களிடம் இருந்தோ அல்லது பொது அமைப்புகளிடம் இருந்தோ மாலை, மரியாதைகளை பெறுவது இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பானது என்றும், வீதிகள் உடபட ஒப்பந்த காரர்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் ஒப்பந்த காரர்கள்,அரச அதிகாரிகளுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோமாலை மரியாதை செய்வது ஒப்பந்தகாரர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவதை போன்றது. எனவே முன் உதாரணமாக ஏறாவூர் பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் போது மாலை மரியாதைகளை தடை செய்யுமாறு பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் குறித்த பிரேரணையை இன்றைய தினம் கொட்டுவந்திருந்தார்.
ஆனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பணவு முதல் கொண்டு சிற்றூண்டி வரை மக்கள் வரிப்பணத்திலே வழங்கப்படுவதால் மாலை மரியாதை கௌரவிப்புகளை தடை செய்ய முடியாது என கூறிய தவிசாளர் குறித்த பிரேரணையை தள்ளுபடி செய்தார்.
மாலை மரியாதைகளுக்காகவா அரச அதிகாரிகளும், பிரதேச சபை உறுப்பினர்களும் பணியாற்றுகின்றனர், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள், மக்களின் பணத்தில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மாலை மரியாதை வேண்டும் என்று கூறுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
