(சுமன்)
மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கள ஆய்வு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் 18ம் வட்டாரம் புளியந்தீவு தெற்கு மற்றும் 17ம் வட்டாரம் புளியந்தீவு பகுதிகளுக்கான களவிஜயம் முன்னெடுக்கப்பட்டது.
மாநகர பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் தலைமையிலான மாநகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் அடங்கிய குழுவினர் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
புளியந்தீவு தெற்கு பிரதேசத்தின் வட்டார உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களிடம் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வாவிக்கரை வீதி 2 ல் வடிகாண் அமைப்பது தொடர்பில் முன்மொழிவு கொண்டுவரப்பட்டு பாதீட்டில் உள்வாங்கப்பட்டிருந்தது.
அதேபோன்று புளியந்தீவு வட்டாரத்தில் எஸ்.மங்களராஜன் அவர்களிடம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிகார் வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் ஊடாக முன்மொழிவு செய்யப்பட்டு பாதீட்டில் உள்வாங்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக மாநகர பிரதி முதல்வர் தலைமையிலான குழுவினரால் குறித்த கள ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.