சிறுவர்களின் உரிமையினையும் பாதுகாப்பினையும் வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி


சிறுவர்கள் நாங்கள்.எங்களை சுதந்திரமாக செயற்பட உதவுங்கள்,நாளைய தலைவர்களாக வரும் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று மாலை விழிப்புணர்வு பேரணியும் கவன விழிப்புணர்வு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. 
சிறுவர் பாதுகாப்பு வாரத்தினையொட்டி இந்த நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த உலகம் என்னும் தொனிப்பொருளில் மெதடிஸ்த திருச்சபையின் கோட்டமுனை சேகரத்தின் சிறுவர் அபிவிருத்தி பணி,சமூதாய திட்டத்தின் கீழ் செயற்படும் சவுக்கடி வில்லியம் ஓல்ட் சிறுவர் அபிவிருத்தி திட்டம்,தன்னாமுனை ஏஞ்ஜல் சிறுவர் அபிவிருத்தி திட்டம்,சின்ன ஊறனி பாபரா அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் மாணவர்கள் ஆசிரியர்கள்,பணியாளர்கள்,பெற்றோர் ஒன்றிணைந்து இந்த பேரணியை நடாத்தினார்கள்.
கோட்டமுனை சேகரத்தினுடைய முகாமைக்குருவும் இந்த மூன்று திட்டங்களின் இயக்குனருமாகிய அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு கோட்டைமுனை சேகரத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திபூங்காவரையில் சென்றதுடன் அங்கு விழிப்புணர்வு போராட்டத்தினையும் நடாத்தினார்கள்.
இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் சிறுவர்களின் உரிமையினையும் சிறுவர்களின் பாதுகாப்பு,அவர்களின் சுதந்திரத்தினை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.
சிறுவர்களே இந்த நாட்டின் தலைவர்கள்.அவர்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களிலிலும் அடங்குமுறைகளிலுமிருந்து பாதுகாக்கப்பட்டு அவர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக செயற்படும் வகையிலான நிலைமைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என இங்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.