வீரமுனையை இல்லாமல் செய்ய முன்னெடுக்கமுயற்சி,என்னை கொலைசெய்யவும் முயற்சி –உண்மைகளை வெளிப்படுத்திய ஜனா(VIDEO)

வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலேதான் தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே சில பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,


இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே கிழக்கு மாகாணத்தை அபகரிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கல்லோயாக் குடியேற்றத்தினைக் கொண்டு வந்தார்கள். 1921ம் ஆண்டு குடிசன மதிப்;பீட்டின் அடிப்படையில் வெறுமனே நூற்றுக்கணக்கிலேயே சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தர்கள். ஆனால் இன்று 25 வீதத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதம் கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்ய வேண்டும். இதனையும் சிங்கள மாகாணமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டிருந்தாலும் 1983 காலகட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலே தான் தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே சில பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன.
எங்களுக்குள் இருக்கும் சிலரையும். முஸ்லீம் ஊர்காவற்படையினரையும் கனகட்சிதமாகப் பயன்படுத்தி இரண்டு இனங்களுக்குமிடையில் விரோதங்களைக் கொண்டு வரும் போது தான் எங்களுடைய சகோதர இனமான முஸ்லீம்கள் தாங்கள் இந்தப் பிரதேசத்திலே குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை தங்களது பிரதேசமாகக் கருத வேண்டும். தங்களது பிரதேசமாக எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பல தமிழ் கிராமங்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன், அரசாங்;கத்தின் உதவியுடன் பல திட்டமிட்ட படுகொலைகளை இன அழிப்புகளை, கிராமங்களை இல்லாதொழிக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
அதில் பெரியதொரு வேலைத்திட்டமே மட்டக்களப்பு, அம்பாறை பிராந்தியத்திலே பலம்பெரும் கிராமமான இந்த வீரமுனைக் கிராமத்தை இல்லாதொழித்தல், அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக இந்த சம்மாந்துறைப் பகுதியில் எந்தவொரு தமிழ் அடையாளத்தையும் இல்லாமலாக்கி விடலாம் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட செயலாகவே இதனை நான் கருதுகின்றேன்.
அந்தக் காலகட்டத்திலே இந்த மக்களை மீண்டும் இந்தக் கிராமத்திற்குக் கொண்டு வருவதற்கு நான் முயற்சித்ததற்காக என்னையும் லெட்சக் கணக்கில் பணம் செலவழித்து இல்லாதொழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிந்தேன். அது முடியால் போக தங்களது வஞ்சகத்தினைத் தீர்ப்பதற்காக தங்களது கிராமம் சம்பந்தமாக ஒரு புத்தகத்தில் என்னை இஸ்லாமிய இனத்தின் விரோதியாகச் சித்தரித்து வெளியிட்டிருந்தார்கள். 
இன்று இந்த செம்மணி போன்ற இடங்களிலே பல புதைகுழிகள் தோண்டப்படும் போது அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் கண்முன்னே நடமாடித் திரிகின்றார்கள். இதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. இவைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அது மாத்திரமல்ல இந்த வரலாறுகளை நாங்கள் மன்னித்தாலும் மறக்காமல் இருக்கின்றோம். 
கடந்த பல தசாப்;த காலங்களாக நாங்கள் எங்கள் விடுதலையை வேண்டிப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எமது போராட்ட வடிவங்கள் மாறலாம், எமது தேவைகளும் மாறியிருக்கலாம். ஏனெனில் நாங்கள் எல்லாம் தனிநாடு வேண்டும் என்று போராடியவர்கள் ஆனால் இன்று அது சுருங்கிச் சுருங்கி இணைந்த வடக்கு கிழக்கு கூட எமக்குக் கிடைக்காது என்ற காலகட்டத்திலே இருக்கின்ற மாகாணசபை அதிகாரத்தையாவது முழுமையாகப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே இருக்கும் நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
எமது கிழக்கு மாகாணத்திலே யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது, இன ஒற்றமை வேண்டும் என்று சொல்லும் அரசியல்வாதிகள், குறிப்பாக நேற்றுப் பெய்த மழையில் முளைத்தவர்கள், கடந்த கால வரலாறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாது விட்டால் ஏனையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இழந்தவர்கள் நாங்கள், உங்களுக்கு அந்த இழப்புகள் தெரியாது. இங்கு நடந்த படுகொலைகளைக் கண்ணால் கண்டவர்கள் இருக்கின்றார்கள். தங்களது சிறு வயதுகளிலே அவற்றைப் பாhத்தவர்களுக்கு அந்த மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்து இந்த இன ஒற்றுமை சம்பந்தமாகக் கதைக்க வேண்டும்.
இன ஒற்றுமை சம்மந்தமாக நாங்கள் கதைக்கின்றோம். எங்களுக்குத் தீர்வு வேண்டும், நாங்கள் அரசியல் செய்ய வேண்டும், உள்ளுராட்சி மன்றங்களை அமைக்க வேண்டும். ஆனால் இங்கு பல பிரச்சனைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நூங்கள் பேசித் தீPர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் பேச முடியாதா? சபைகளை அமைத்து அதிகாரத்தைப் பெறும் நாங்கள் அந்த மக்கள் படும் தன்பங்களைக் களைய முடியாதா என்பதைச் சிந்தித்து எதிர்காலத்திலே எவ்வாறு இன ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, ஒருதலைப் பட்சமாக எந்த முடிவுகளும் எடுக்காமல் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
எங்களது தேவை, எங்களுக்குக் கிடைக்க வேண்டிய தீர்வுகள் எங்களது ஒற்றுமையின் மூலமாகவே கிடைக்குமே தவிர வேறு யாருடனும் சேர்ந்து பெற முடியாது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் நாம் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும். அதற்கு எந்த விட்டுக் கொடுப்புக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
என்றோ ஒரு நாள் மரணம் என்ற கோட்பாட்டிலேயே நாங்கள் போராடச் சென்றவர்கள். எமது மக்களுக்காக எதற்கும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். எனவே எங்களுடைய ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். நாங்கள் ஒன்றாகப் பயணித்தால் மட்டுமே இவ்வாறான விடயங்களுக்கு நாங்கள் ஒரு தீர்வினைக் காணலாம், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறாமல் இருக்க நாங்கள் உரிமையுடன் எமது பிரதேசங்களிலும் வாழலாம் என்று தெரிவித்தார.