தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்


பத்து வருடங்களுக்கும் மேலாக நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை இலக்காகக் கொண்ட 'தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025', கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

இன்று திங்கட்கிழமை பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சும் 'Clean Sri Lanka' திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நாடு தழுவிய கணக்கெடுப்பு, ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வைக் குறிக்கும் வகையில், அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் மீன்பிடிப் படகுகளில் கணக்கெடுப்புக்கான ஸ்டிக்கர்களை ஒட்டியும், டெப் கணினிகள் மூலம் தரவு முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்தும் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

பின்னர், பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீனவ சமூகத்துடன் அவர்கள் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.