புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தினதும், மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரதும் ஆதரவுடன் சு.நிர்மலவாசன் இக்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த போர்க் காலத்தில் ஏற்பட்ட துயரங்களை கிழக்கிலங்கையின் கத்தோலிக்கப் பண்பாட்டு அனுபவங்களின் பின்புலத்தில் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்துடன் ஓவிய தாபனக் காட்சியாக சு.நிர்மலவாசன் படைத்தளித்துள்ளார்.
பிரதிமை ஓவியம் எனும் வகைமையினையும் அதற்கான உத்திகளையும் தனது படைப்பாற்றலூடாகக் கையாண்டு இக்காட்சியைப் பொது வெளிக்குத் தனது 15 ஆவது தனிநபர் காட்சியாகப் பகிர்ந்துள்ளார் சு.நிர்மலவாசன்.
2000 ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று மட்டுநகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுகளிலும் கொல்லப்பட்ட ஆயித்தியமலையினைச் சேர்ந்த மறைக்கல்விச் சிறார்கள் பத்துப்பேரின் பிரதிமை ஓவியங்களும், அவர்களின் மரணத்தின் துயரத்தைச் சுமந்து வாழும் தாய்மாரின் பிரதிமைகளும் அந்தத் துயரங்களின் நினைவுகளும் உணர்வுபூர்வமாக இக்காட்சியில் வெளிக்காட்டப்பட்டுள்ளன. காண்பவரின் உள்ளத்தை உலுப்பி அழச்செய்யும் விதத்தில் இக்காண்பியத்தை சு.நிர்மலவாசன் படைப்பாக்கி இருக்கிறார்.
காட்சி நடைபெறும் மட்டுநகரின் மரபுரிமைச் சின்னங்களுள் ஒன்றாகவுள்ள புனித மிக்கேல் கல்லூரியிலுள்ள இயேசுசபைத் துறவியர்களின் பிரமாண்டமான கட்டடமும் அதன் ஒரு பகுதியான சிறற்றாலயமும் கண்காட்சியை மேலும் செறிவுள்ளதாக ஆக்கியுள்ளது எனலாம்.
இத்தோடு தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டும் ஒடுக்கப்பட்ட சாதாரண பொது மக்களுக்காகக் குரல் கொடுத்து அதன் காரணமாகக் கொல்லப்பட்ட, மீளமுடியாத பாதிப்புகளுக்கு உள்ளாகிய கத்தோலிக்கக் குருவானவர்களின் பிரதிமைகளும் அவர்களின் கதைகளும் இக்காட்சியில் மீளவும் நினைவுகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மட்டுநகர் இணைப்பேராலயத்தின் குருமனையில் வைத்து 1988 .06.06 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட பாதர் சந்திரா பெர்ணாண்டோ, வாழைச்சேனையிலிருந்து தொழில்நுட்பம் பயின்ற மாணவனை அழைத்து வரும் போது 1990 இல் காணாமலாக்கப்பட்ட பாதர் ஹேபயர், 1990 இல் சொறிக்கல்முனையில் தஞ்சமடைந்த மக்களுக்காக உணவுப் பொருள்களை எடுக்கக் கல்முனைக்கு வந்து திரும்பிய போது காணாமலாக்கப்பட்ட அருட்பணி செல்வராஜா சவரிமுத்து ஆகியோரின் துயரமான 'கெத்சமனி' வாழ்வு இங்கு பதிவாக்கப்பட்டுள்ளது.
இத்தோடு போர்க்காலத்தில் மக்களுக்காகப் பணியாற்றிய பாதர் ஹாரி மில்லரின் கதையும், மக்கள்பணியாற்றி இன்றுவரை மீளமுடியாத பாதிப்புகளுடன் வாழும் பாதர் ஜே.சந்திரா, பாதர் ஜி.அம்புரொஸ் ஆகியோரின் கதைகளும் பதிவாக்கப்பட்டுள்ளன.
காட்சியின் ஆரம்ப வைபவத்தில் போர்க் காலத்தில் தம்பிள்ளைகளைப் பலி கொடுத்த தாய்மார்களும், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அவர்களும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், கத்தோலிக்கக் குருவானவர்களும், புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களும், பொது மக்களும் எனப் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
உலக வரலாற்றில் போர்க்காலத்து அவலங்களையும், அடக்குமுறைகளையும் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிக்காட்டும் கலைஞர்களின் கலைப் படைப்புகளே காலங் கடந்தும் வெளிக்காட்டவல்லது என்ற உண்மையின் புரிந்து கொள்ளலுடன் சு.நிர்மலவாசனின் கெத்சமனி காண்பியக் கலைக் காட்சியின் பெறுமதி கவனத்திற்குரியதாகிறது.
இக்காட்சி இன்றும், நாளையும், நாளை மறுதினமும் (சனி,ஞாயிறு,திங்கள்) மு.ப 09:30 - பி.ப 06:00 மணி வரைக்கும் நடைபெறவுள்ளது.