உலக வங்கியின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ். நவீன்திரதாஸ் மற்றும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நிபுணர் எம்.எஸ்.ஏ. காலீஸ் ஆகியோரால் இத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இத்திட்டமானது திருகோணமலை மாவட்டத்தின் மொறவௌ, கோமரன்கடவல, பதவி ஸ்ரீபுர மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொடர்புடைய திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் அதிகாரிகள், துறைசார்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.