மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலான விற்பனை கண்காட்சி இன்று(21) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ரெக்னோ பார்க்கின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் அதிகாரசபை உட்பட பல்வேறு நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த விற்பனை கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் வளாகத்தில் இந்த விற்பனை கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தனர் பேராசிரியர் ரி.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர்முயற்சியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்காகவும் இவ்வாறான சந்தைகள் ஏற்படுத்தப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த விற்பனை கண்காட்சிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததை குறிப்பிடத்தக்கது.இந்த கண்காட்சியானது இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.