06, வது விகிதாசாரத்தேர்தல் -2010 மட்டக்களப்பு மாவட்டம்- அறிந்தவை அறியாதவை.-வரலாற்றுப்பதிவு (பா.அரியநேத்திரன்)


2009,மே,18, ல் போர் மௌனித்த பின்னர் இடம்பெற்ற முதலாவது விகிதாசாரத் தேர்தல் எனவும் இதை பார்க்கலாம்.போர் மௌனித்தாலும் அச்சத்திலும், இழப்புகளிலும் இருந்து மக்கள் விடுபடவில்லை.''மழை விட்டாலும் துவானம் ஒயவில்லை'' என்பது போல் தமிழ் ஆயுத ஒட்டுக்குவின் அட்டகாசம்,அச்சுறுத்தலும் தேர்தல் காலத்தில் இல்லாமல் இல்லை..தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர் 2010, வேட்பாளர் பங்கீடு பற்றிய கலந்துரையாடல் சம்பந்தர் தலைமையில் கொழும்பு மாதிவெல பாராளுமன்ற உறுப்பின் செல்வம் அடைக்கலநாதனின் விடுதியில் இடம்பெற்றது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.     

2010, தெரிவின்போது யாழ்மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகிய இருவரையும் யாழில் வேட்பாளர்களாக நியமிக்க முடியாது என சம்பந்தர் தரப்பு கூறியதால் கஜேந்திரகுமார் பொன்னமரபலம் அவரக்ள் இருவருக்கும் சந்தர்ப்பம் தராவிட்டால் தாமும் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வரமாட்டேன் என கூறினார். பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி சைக்கிள் சின்னத்துடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில்  அவர்கள் தனியாக யாழ் திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிட்டும் எந்த ஒரு ஆசனங்களையும் பெறவில்லை.
ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி உறுப்பினரான கஜேந்திரகுமாரின் மாமா சட்டத்தரணி வினாயகமுர்தி யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவானார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஆயுதக்குழுவின் அட்டகாசம் தொடர்ந்தமையால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்பட்ட  த.கனகசபை தாம் தேர்தலில் அச்சசூழலால் போட்டியிடமாட்டேன் என கூறி விலகினார்.
செல்வி க.தங்கேஷ்வரி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளரானாராக கருணாவுடன் இணைந்தார்.
சே.ஜெயானந்தமூர்த்தி லண்டனில் குடும்பத்துடன் சென்ரார்.
பா.அரியநேத்திரன் மட்டுமே மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் தேர்தலில் போட்டியிட்டார்.

மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர்களாக போட்டியிட அப்பொது எவரும் விரும்பி முன்வராத நிலையில் மட்டக்களப்பில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்யும் சூழல் இருக்கவில்லை.
2010 தேர்தலில் வேட்பாளராக  'ஆம்" என்றவர்கள் கூட இறுதியில் “இல்லை” என கூறி காலை வாரிவிட்டனர்.

இந்நிலையில் கொழும்பில் வேட்பாளர்கள் தெரிவு பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது. மறைந்த பொன்.செல்வராசா ,பா.அரியநேத்திரன் , ஊடகவியலாளர் இரா. உதயகுமார் ஆகிய மூவரும் கொழும்பு மாதிவெல பா.அரியநேத்திரனின் பாராளுமன்ற விடுதியில் சென்று மாவை அண்ணருடன் கதைத்து மட்டக்களப்பு வேட்பாளர் தொடர்பாக மட்டக்களப்பில் பலருடன் தொலைபேசியில் கதைக்கத்தோம்.
அதில் கல்குடா தொகுதியில் வேட்பாளராக கி.துரைராசிங்கத்தை நியமிக்கலாம் தாம் அவருடன் கதைத்ததாக மாவை அண்ணர் கூறினார்  அவர் பூரண சம்மதம் ஆரம்பத்தில் தெரிவித்தார் பின்னர் செல்வராசா அண்ணரிடம் தன்னால் வேட்பாளராக வர குடும்பத்தார் அச்சத்தால் விரும்பவில்லை என கூறி அவரும் தாம் முடியாது கைவிட்டார். பின்னர் ஒரு நாள் கழித்து அவரே பொருத்தமான ஒருவர் உள்ளார் என சீனித்தம்பி யோகேஷ்வரனின் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் தந்தார்.
யோகேஷ்வரன் அப்போது இந்தியாவில் ஆலய தரிசனத்துக்காக சென்றுள்ளதாகவும் நாளை இலங்கைக்கு வந்து சந்திப்பதாகவும் கூறினார்.
பின்னர் அவரும் சம்மதித்த பின்னர் வேட்பாளர் நியமனப்பத்திரங்களை கொழும்பில் மாவை அண்ணரிடம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குரிய வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பில் வந்து மட்டக்களப்பில் நகர்பகுதியில் வேட்பாளர்களை ஒன்றாக அழைப்பதில் அச்சம் இருந்தமையால் அம்பிளாந்துறையில் பா.அரியநேத்திரனின் வீட்டில் வேட்பாளர்களை தனித்தனியாக வரவழைத்து கையொப்பம் பெறப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி 06  வேடர்பாளர்களும்,டெலோ ஒருவேட்பாளரும்  (01) ஈ.பி.ஆர்.எல்.எப்  ஒரு வேட்பாளரும்(01) என கொழும்பில் கூடி முடிவானது.
இந்த சந்திப்பில் பிரசன்னா இந்திரகுமாரும் எம்முடன் கலந்துகொண்டார்.
 
இரு நாட்கள் கொழும்பில் தங்கியிருந்த மூவரும் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களுக்கான வேட்பு மனு படிவங்களுடன் மட்டக்களப்பு திரும்பினர்.
காலையில் மட்டக்களப்பு வந்தடைந்தடைந்தனர். பொன்.செல்வராஜா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டி என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
வேட்பு மனு மட்டக்களப்பு கையளித்து அன்று நண்பகல்  செல்வராசா அண்ணரின் மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதி வீட்டில் கைதுப்பாக்கியுடன் சென்ற ஆயுதபாணி யொருவர் அவரை கதவில் தட்டி கதைப்பது போல் பாசாங்கு செய்து சுடுவதற்கு கை துப்பாக்கிய நீட்டியபோது  அவர் சத்தம்போட்டார்.உடனே அந்த ஒட்டுக்குழு உறுப்பினர் ஓடிவிட்டான் தெய்வாதீனமாக செல்வராசா அண்ணர் உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தை உடனடியாக செல்வராசா அண்ணர் பா.அரியநேத்திரனிடம் தொலைபேசியில் கூறினார்.

அரியநேத்திரன் இதனை பகிரங்கபடுத்தினால் ஏனைய வேட்பாளர்களும் பயப்படுவார்கள். அதைவிட எவரும்
பிரச்சாரம் செய்ய எம்முடன் வரமாட்டார்கள் ஊடகங்களிலும் இதனை பகிரங்கப்படுத்தவேண்டாம் என ஆலோசனை கூறியதும் அதனை செல்வராசா அண்ணர் ஏற்றுக்கொண்டு வெளியில் எவரிடமும் கூறவில்லை. மாவை அண்ணருக்கு மட்டுமே கூறினார்.                                                           தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகனம் அப்போது வாடகைக்கு கூட தர பலர் முன்வரவில்லை. பிரசுரங்களை அச்சிட அச்சங்கள் மறுத்தன.
இப்படியான பல சிக்கல் நிலையில் அந்த
 தேர்தல் பிரசாரங்கள் முடியும் வரை பல உண்மைகள் மறைக்கப்பட்டது.

ஆனால் குறைந்த ஆட்பலத்துடன் கையாண்ட இப்படியான யுக்தி தான் அச்சுறுத்தல்கள்,மிரட்டல்களை தாண்டி மட்டக்களப்பு தமிழ்மக்கள் மூன்று(3)ஆசனங்களை தக்க வைக்க முடிந்தது.
அந்த தேர்தலில் குறிப்பாக அரியநேத்திரனும், செல்வராசா அண்ணரும் பயந்து ஒதுங்கியிருந்தால் இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பில் முகவரி அற்று போய் இருக்கும். தமிழ்தேசிய அரசியல் மறைக்கப்பட்டு ஆழும் தரப்பு அரசியல் மேலோங்கி இருக்கும், 2015, தேர்தலில் ஆதரவை பெறுவது சிரமம் ஏற்பட்டிருக்கும்( இன்னும் பல உண்மைகள் சில காரணங்களால் தவிர்த்துள்ளேன்)

2010, பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள்:

01.பொன்.செல்வராசா(தமிழரசு)-கல்லாறு
02.பா.அரியநேத்திரன்(தமிழரசு)-அம்பிளாந்துறை.
03.சீ.யோகேஸ்வரன் (தமிழரசு)-வாழைசரசேனை.
04.பிரசன்னா இந்திரகுமார்(டெலோ)-மட்டக்களப்பு.
05.கு.சௌந்தராஜன் (தமிழரசு)-மட்டக்களப்பு.
06.சு.சத்தியநாதன் (தமிழரசு)-கதிரவெளி
07.க.ஆறுமுகம்(ஈ.பி.ஆரா.எல்.எப்)-கன்னன்குடா.
08.த.சிவநாதன் (தமிழரசு)-தேற்றாத்தீவு.

தேர்தல் முடிவுகள் :
மொத்தவாக்குகள்: 3,33,644
வாக்களித்தோர் :1,95,367
வீதம் : 59%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:14,749

கட்சிகள் பெற்ற வாக்குகள்:
த. தே.கூ : 66,235 வாக்குகள் ஆசனம் 03
ஐ.ம.சு.மு: 62,009 வாக்குகள் ஆசனம் 01
ஐ.தே.க   :  23,935 வாக்குகள் ஆசனம் 01

ஆசனம் பெறாத கட்சிகள்:
த.ம.வி.பு :16,886 வாக்குகள்
த.வி.கூ.  : 4,424
 ஈரோஸ் 1,066                                               புளொட் 136 வாக்குகளையும் இந்த தேர்தலில் பெற்றிருந்தன.
17 கட்சிகளும் 28 சுயேட்சைகளும் களத்தில் நின்றன.

தெரிவானோர்:
த.தே.கூ
01.சீ.யோகேஸ்வரன் -20,569 வாக்குகள்
02.பொன்.செல்வராசா-18,485 வாக்குகள்
03.பா.அரியநேத்திரன் -16,504 வாக்குகள்
04.ஐ.ம.சு.முன்னனி  ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 22,256 வாக்குகள்
05.ஐ.தே.கட்சி  பஷீர் சேகு தாவூத் -15432, வ (ஶ்ரீ.மு.கா,ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது)

2004ல் தெரிவான அமீர் அலி இந்த தேர்தலில் தெரிவாகவில்லை.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP)
அரசியல் கட்சியாக பதிவு செய்த பின்பு 2010,அதன் முதலாவது நாடாளுமன்ற  தேர்தலை சந்தித்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளி கட்சியாக அவ்வேளை இருந்தாலும் 2010 தேர்தலில் தனித்து போட்டியிட்ட மகிந்தராசபக்‌ஷ அனுமதித்திருந்தார்.

2010, ல் பல உயிர் அச்சுறுத்தல், நெருக்கடிகள், இன்னல்களை சந்தித்தபோதும் மட்டக்களப்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் இருந்து தெரிவானார்கள் மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 66,235, வாக்குகள் கிடைத்தது.

அடுத்த பதிவில் 06, வது விகிதாசாரத்தேர்தல் 2015, பற்றி பார்க்கலாம்.

✍️பா.அரியநேத்திரன்-
05/11/2024
(அரியம் ஆய்வகம்)