மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர் இல்லத்தில் சமைலறை உதவியாளரான மூதாட்டி பலி-

மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய மூதாட்டியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக  சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த  ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை துளசிமணி என்பவரே உயிரிழந்ததாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

சித்தாண்டி பகுதியிலுள்ள சிறுவர் இல்லத்தில் சமைலறை உதவியாளரான இவர் தனது மகளின் வீட்டிலிருந்து சிறுவர் இல்லத்திற்கு செல்வதற்காக பிரதான வீதியைக் கடந்துசென்றவேளை சிறிய லொறியொன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்த லொறி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விபத்தினால் உயிரிழந்த மூதாட்டியின் தலை சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவடிவேம்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலத்தையும் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும்  திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். அதையடுத்து சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.