களுவாஞ்சிகுடியில் சம்பந்தர் ஐயாவுக்கு அஞ்சலி –பௌத்த,முஸ்லிம் மத தலைவர்களும் பங்கேற்பு


சிங்கள தலைவர்களின் மனங்கள் நோகாத வகையிலும் முஸ்லிம் மக்களை அரவணைத்துச்செல்லும் வகையிலும் தலைவர் சம்பந்தன் ஐயாவின் பேச்சுகள் அமைந்திருந்தன என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
நல்லாட்சிக்காலத்தில் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் தலைவரின் கருத்துகள் நம்பிக்கையானதாகயிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிகுடி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிகுடி வட்டாரக்கிளையின் தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினருமான வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்து,பௌத்த,முஸ்லிம்,கிறிஸ்தவ மதகுருமார்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன்,செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை,தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் க.சேயோன்,மகளிர் அணி தலைவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சிஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.