தமிழுக்கு வளஞ்சேர்க்கும் துறைநீலாவணையைச் சேர்ந்த சா.திருவேணிசங்கமம்

து.கௌரீஸ்வரன்,
மட்டக்களப்பின் துறைநீலாவணையைச் சேர்ந்த சாமித்தம்பி திருவேணிசங்கமம் அவர்கள் தனது மொழிப் புலமையாலும், ஆய்வறிவுத் திறனாலும் தமிழ் கூறும் உலகில் நன்கு அறியப்பட்ட புலமையாளர்.


ஆங்கிலத்திலிருந்து காத்திரமான விடயங்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் மொழிவல்லானாக இவர் செயலாற்றி வருகிறார்.
இதுவரை காத்திரமான பத்து ஆங்கில நூல்களை தமிழாக்கித் தந்துள்ளார்.
எடுத்துக் காட்டாக எஸ்.ஓ.கனகரத்தனா என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய  Monograph of the Batticaloa District of the Eastern Province Ceylon 1921  எனும் நூலினையும், ரொபட் நொக்ஸ், சைமன் காசிச்செட்டி, எம்.டி.ராகவன் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதி இவரால் தமிழில் தரப்பட்டுள்ள நூல்களையும் காணலாம்.
இத்தோடு பல காத்திரமான ஆங்கில மொழிக் கட்டுரைகளையும் இவர் தமிழாக்கிப் பல்வேறு பத்திரிகைகளிலும் பருவ இதழ்களிலும் வெளியிட்டு வருகின்றார்.
1949 இல் பிறந்த இவர், துறைநீலாவணை அரசினர் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரையும் பின்னர்  களுவாஞ்சிக்குடியிலுள்ள பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 11 வரையும் கற்றவர்.
பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து ஆங்கில மொழி மீதான ஈடுபாட்டினால் ஆங்கிலத்தை ஆர்வத்துடன் படித்ததுடன் சிறிது காலம் கணித, விஞ்ஞானப் பாடங்களுக்கான உதவி ஆசிரியராகவும் சேவையாற்றி மகாணசபையில் தகவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ஆங்கில மொழியில் இதழியலில் டிப்ளோமாப் பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், சமூகவிஞ்ஞானப் பட்டப்படிப்பை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேர்ந்தவர்.
தனது 75 ஆவது வயதிலும் அமைதியாகவும், தன்னடக்கத்துடனும் காத்திரமான விடயங்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் கருமங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
இவர் தமிழில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஆழமான ஆய்வறிவின் வெளிப்பாடுகளாகவும், தர்க்கபூர்வமாக, உண்மைகளைக் கண்டறியும் நோக்குடன் எழுதப்படுபட்டவையாகவும், ஆய்வுக் கட்டுரைகளை எழுவதற்கான கற்றலை வழங்குபவையாகவும் காணப்படுகின்றன.
இவருடைய விமரிசன எழுத்துகளும், விமரிசன உரையாடல்களும் எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி ஆய்வறிவு நேர்மையுடன் பகிரப்படுபவையாக இருப்பதனைக் காணலாம்.
இவ்விதம் ஆழமான ஆய்வறிவுத் தேடலுடனும், நேர்மையான விமரிசன மனப்பாங்குடனும் காத்திரமான மொழிபெயர்ப்புக்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தந்தவாறு கிழக்கிலங்கையிலிருந்து அமைதியாகச் செலாற்றிக் கொண்டிருக்கும் திரு சா.திருவேணிசங்கமம் அவர்கள் இலங்கையரசின் கலாபூசணம் விருது வழங்கி மாண்பு செய்யப்பட்டிருக்கிறார்.
அவரை வாழ்த்துவோம்! கொண்டாடுவோம்!
அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.