மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - மரப்பாலம் இராஜபுரம் பகுதியில் உயிருக்கு போராடிய காட்டு யானை இன்று உயிரிழந்தது.
இராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றினுள்ளே குறித்த காட்டு யானை நேற்று காலை வீழ்ந்து கிடந்தது.
வீழ்ந்து உணவு உற்கொள்ள முடியாமலிருந்த யானையினை நேற்றைய தினம் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று பார்வையிட்டுச் சிகிச்சையளித்து பராமரித்து வந்த நிலையில் இன்று காலை யானை உயிரிழந்தது.
இதே வேளை இன்றைய தினம் யானையினை உடற்கூற்று பரிசோதனை செய்வதற்கு அம்பாறை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தலைமையிலான குழுவினர் வருகை தந்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
குறித்த யானையானது சூட்டு காயத்தினாலேயே நடக்க முடியாமல் வீழ்ந்துள்ளதாகவும் , இதனால் உணவு உற்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் உடற்கூற்று பரிசோதனையின் பின் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவின் படி யானையினை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளது.