மட்டக்களப்பில் அடை மழை -2346குடும்பங்கள் பாதிப்பு-தாழ்நிலங்கள் தொடர்ந்து வெள்ளத்தில்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இதுவரையில் 2346 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடிக்கச்சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்வரும் மழை காரணமாக மட்டக்களப்பின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கீயுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் மழைபெய்யும் நிலைமை காணப்படுவதனால் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் படகுச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல் பாலம் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படகுச்சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணதாக 115 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றில் 88 குடும்பங்கள் நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன் 27குடும்பங்கள் ஏறாவூர் நான்காம் குறிச்சியில் உள்ள மணிமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 33குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவில் 07குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 10குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 290 குடும்பங்கள் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 393 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்லரிப்பு என்னும் இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளநிலையில் அப்பகுதிக்கு படகுச்சேவை,உழவுஇயந்திர சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அத்துடன் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1505 குடும்பங்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு உறவினர்கள்,நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள நிலையில் 07 குடும்பங்கள் காத்தான்குடி பதூரியா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று காலை மீன்பிடிக்கச்சென்ற மீனவர் படகு கவிழ்ந்த நிலையில் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.