இணைந்த வடகிழக்கில் சமஸ்டியே தீர்வு –மட்டக்களப்பில் நடைபெற்ற கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்

(பி.நவநீதன்)
வடக்கு  கிழக்கு பிரதேசங்களில் இலங்கை அரசினால் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன ஒடுக்குமுறை மற்றும் அடக்கு முறைகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு கண்காட்சியும் வியாழக்கிழமை (14) மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்குமாகாண அங்கத்துவ அமைப்புக்கள் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்ஆரம்ப நிகழ்வாக தன்னாமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழர்களுக்கான சமஸ்டி அதிகாரத்தை வலயுறுத்தும் வகையலான ஊர்வலம் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்படும் வரலாறுகள் தொடர்பான ஆவண தொகுப்பு வெளியிடப்பட்டது.

ஐக்கிய இலங்கைகக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு எனும் தலைப்பில் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்

வடக்கு கிழக்கில் பல வருட காலமாக இலங்கை அரசின் அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்பேசும் மக்கள் பல தசாப்தங்களாக உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையிலான விழிப்புணர்வுக் கண்காட்சியோடு, சமஷ்டியின் தோற்றம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமணி லவகுசராசா,

கடந்த டிசெம்பர்  10ம்  திகதி சர்வதேச மனித உரிமை தினமாகும், அன்றைய  தினத்தில் உலகளாவிய ரீதியில் உள்ள மக்கள், அமைப்புக்கள் மற்றும்  நிறுவனங்கள் இதனை அனுஸ்டிப்பது  வழமையாகும்.

இந்த மனித  உரிமை தினத்திலே இலங்கையின்   வடக்கு கிழக்குப்  பிரதேசங்களிலுள்ள மக்களைப் போன்று மனித உரிமை மறுக்கப்படுகின்ற ஏனைய நாடுகளிலுள்ள மக்கள் தங்களுக்கு இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான  விடயங்களை வெளிக்கொணரும்  வகையில் மேற்கொள்வார்கள்,  சில நாடுகள்  இம் மனித உரிமைகள்  தினத்திலே தங்களதுநாட்டில் மேம்பட்டிருக்கும் மனித சார்ந்த விடயங்களை மையப்படுத்தி அனுஸ்டிப்பது  வழமை.  

இம்மனித  உரிமை தினம் ஏன் அனுஸ்டிக்கப்படுகின்றது  என்பதற்கான அடிப்படை இருக்கின்றது.  அந்த வகையில் 02ம்  உலக   மகா யுத்த்தின் போது  மிக மோசமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள்  பாதிக்கப்பட்டனர், அத்துடன் அதிக உயிர் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில்தான் ஐக்கிய  நாடுகள்  சபையின் பொதுச்சபையினால்  சர்வதேச மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய  பிரகடனம் 1948.12.10ம் அன்று  கொண்டு  வரப்பட்டது.

இப்பிரகடனமானது கொண்டு வரப்பட்டதன்  பின்னணியில் மனித உயிர்கள் காப்பாற்றப்படல் வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அனைத்து மக்களும் தங்களுக்கான  உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் தமக்கான  அடையாளத்துடன், தேசியத்துடனும்  வாழ வேண்டும் எனும் நல்லெண்ணத்துடன் கொண்டு வரப்பட்டது. 

ஆனால் இப்பிரகடத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உலகளாவிய ரீதியில் எந்தளவிற்கு கடைப்பிடிக்கப்படுகின்றது என்றால் அது கேள்வியாகவே இருக்கின்றது.இருந்த போதும் பிரகடம் கொண்டு வரப்பட்ட டிசெம்பர் 10ம்  திகதி அன்று உலகம் முழுவதும் மனித உரிமையினை பேணிப்பாதுகாக்கும் எண்ணத்துடன் சிலரும், தங்களுக்கு இன்றுவரைக்கு இம் மனித உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதனை வலியுறுத்தி தங்களது தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொணரும்  வகையிலும்  அனுஸ்ரித்துக் கொண்டு வருகின்ற நிலமையினை நாம் பார்க்கின்றோம்.

அந்த  வகையில் இங்கு  கூடியிருக்கின்ற  நாம்  ஏன் இந்த மனித உரிமை தினத்தினை அனுஸ்டிக்கின்றோம் என்பதும் நாம் அனைவரும் அறிவோம்.இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாகவும், குறிப்பாக வடக்கு  கிழக்கு பிரதேசங்களில்  பெரும்பான்மையாக  வாழுகின்ற  நாங்கள் தமிழ் மன்னர் ஆட்சிக்  காலத்தில் தனித்துவமாக  கட்டமைக்கப்பட்டிருந்த அரசாட்சியினை நடாத்தி தன்னிறைவுடனும், தனித்துவத்துடனும்  வாழ்ந்த வரலாறுகள் எமக்குண்டு என்பதில் எந்த மாற்றுக்  கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் அதன் பின்னர்  வந்த  அந்நியரின் காலனித்துவ ஆட்சிக்   காலத்தில் இருந்து இன்றைய  பேரினவாத சிங்கள  அரசின்  ஆட்சிக்  காலம்  வரை இன ஒடுக்குமுறைகளுக்கும்  அடக்கு முறைகளுக்கும்   உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்   ஓர் இனமான  வாழுகின்ற  சூழ்நிலைகளுக்கு  தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மேற்படி அந்நியர் ஆட்சிக்  காலம் தொடக்கம் பேரினவாத சிங்கள அரசின் தற்கால ஆட்சி காலம்  வரை எமது வடக்கு  கிழக்கு மக்கள் பல வகையான பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில்,  வடக்கு  கிழக்கில்  75 வருட காலத்திற்கு மேலாக  புரையோடிக்கிடக்கின்ற  தேசிய இனப்பிரச்சினைக்கான   அரசியில்  தீர்வு வேண்டி எமது தமிழ் தலைவர்கள் பல வழிகளிலும் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் குறிப்பாக இலங்கை தீவில்;  1948ம் ஆண்டிற்குப் பின்னரான இலங்கை சிங்கள பேரினவாத  அரசின்   இனவாத அடக்கு முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும்  உள்ளான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டிய போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் குறிப்பாக அரசியில் தீர்வு தொடர்பான ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்ததைகளையும்  தமிழ் தலைவர்கள் காலனித்துவக்  காலங்களிலும் அதற்கு பின்னராக இலங்கையில்  மாறி மாறி ஆட்சிக்கு  வந்த சிங்கள அரசின் தலைவர்களுடனும் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக செல்வா பண்டா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், திம்பு பிரகடனம் மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தை போன்ற முக்கியமானவற்றை நாம்  இங்கு குறிப்பிட முடியும்.

ஆனால் மேற்படி அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும்  குறிப்பாக இலங்கையின் பேரினவாத சிங்கள  தலைவர்களால்  நிராகரிக்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்ட வரலாறுகளே  அதிகமாகும்.

குறிப்பாக 1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலமான 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால்  இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும்  முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.  இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, தமிழ் மக்களின் மத கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு சிங்கள காலனித்துவக் குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலை தொடருகின்றது. அத்துடன் மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தல்களையும்  இன்றுவரையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.  

இவ்வாறானதொரு இன ஒடுக்கு முறைக்கு  காலம் காலமாக முகம்கொடுத்துவரும் வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய  100 நாள் செயல்முனைவினை  வடக்கு கிழக்கு  பிரதேசம் முழுவதுமாக வடக்கு  கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்டிருந்தது.

இதன் இறுதி நாளான 2022ம் ஆண்டு  நெவம்பர் மாதம் 08ம் திகதி அன்று வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு”  வேண்டும் எனும் மக்கள் பிரகடனம்  வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள  08 மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டது.

மேற்படி  இன அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும்  உள்ளாகி இருக்கும் எமது  வடக்கு கிழக்கு மக்கள் தனியான தேசியம்,தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழக் கூடிய  வகையிலான “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும்  பட்சத்திலேயே  வடக்கு  கிழக்கு வாழ் தமிழ்பேசும்  மக்கள் நின்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்துடனும்  வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.