சமஸ்டியை வலியுறுத்தி மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு


சமஸ்டி ரீதியான மீளப்பெறப்படாத தீர்வினை வடகிழக்குக்கு வழங்கவேண்டும் என்ற விடயத்தினை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிவினை வழங்கவேண்டும் என்பதான மக்கள் பிரகடனம் குறித்தான தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நிலையத்தில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இது தொடர்பிலான தெளிவுபடுத்தும் செயலமர்வு நடைபெற்றது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பல்கலைக்கழக மாணவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,இளைஞர் யுவதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கான தீர்வினை நோக்கிய 100நாள் செயற்பாட்டுநாளின் இறுதி நாளில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் நூலாக்கப்பட்டு அது தொடர்பிலேயே இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இணைந்த வடகிழக்கின் அவசியம் அதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் உட்பட வடகிழக்கில் வாழும் அடையப்போகும் நன்மைகள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அகம் மனிதாபிமான அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா,

வடகிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதி மற்றும் உரிமைக்காக பணியாற்றிவந்திருந்தாலும் கூட 2022ஆம் காலப்பகுதியில் எமது வடகிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தனது கவனத்தினை அதிகமாக ஈடுபடுத்தியுள்ளது.

அந்த அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வுவேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட 100நாள் செயல்முனைவின் இறுதிநாளன்று ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கிற்குள் மீளப்பெறமுடியாத அரசியல்தீர்வாக சமஸ்டிமுறையான அரசியல் தீர்வு வேண்டும் என்று இந்த இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் பிரகடனப்படுத்தியிருந்தோம்.

இந்த அரசியல் தீர்வானது வடகிழக்கு மக்களின் அபிலாசைகளையும் சுயநீர்ணயத்தினையும் தேசியத்தினையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும்.அந்த அடிப்படையில இந்த சமஸ்டி அதிகாரப்பகிர்வானது எமது மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதற்காக இந்த பிரகடனத்தை இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளுக்கும் இதனை வழங்கியுள்ளோம்.

இந்த சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு என்ற எண்ணக்கரு மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவானது கடந்த மாதத்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள்,இளைஞர் யுவதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகள் மத்தியில் இந்த விடயங்களை புகுத்திக்கொண்டுவருகின்றோம்.

வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவானது வடகிழக்கு தழுவிய ரீதியில் அனைத்து மட்டங்களிலும் இந்த விடயத்தினை கொண்டுசெல்லவுள்ளது.எம்மால் முன்னெடுக்கப்படும் இந்த சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு விடயத்தில் அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று இந்த இடத்தில்கேட்டுக்கொள்கின்றேன்.

70வருடகாலத்திற்கு மேலாக தேசிய இனப்பிரச்சினையிருந்தும் இன்று வரைக்கும் அரசியல் தீர்வு என்பது எட்டாக்கனியாகவேயிருக்கின்றது.தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவேந்தல்செய்யமுடியாமல் தவிர்க்கின்றார்கள்.மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தாயகத்தில் முடக்குவதற்கான அதிகமான செயற்பாடுகளை படைத்தரப்பினர் முன்னெடுத்திருந்தனர். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பாதிக்க்பட்ட மக்கள்,ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்டார்கள்.அதிகமானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு கூட வழங்கப்பட்டிருந்தது.இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் விடயத்தினை தடுப்பதற்காகவும் உரிமைக்குரலை நசுக்குவதற்காகவும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகள் வடகிழக்கில் தொடர்ந்து இடம்பெறக்கூடாது,பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நியாயம்நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு அதிகமான கவனத்தினை செலுத்திவருகின்றது.இது என்றும் தொடரும்.