ஒட்டுமொத்த இலங்கையினையும் திரும்பி பார்க்கவைத்த மட்டக்களப்பு இளைஞனின் சாதனை


பாக்குநீரினை கடந்து தமிழ் இளைஞன் நிகழ்த்திய சாதனையானது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பினை சேர்ந்த தவேந்திரன் மதுஷிகன் என்னும் இளைஞன் தலைமன்னார்  துறைமுகத்திலிருந்து பாக்கு நீரினையை நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் இன்று  பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைத்துள்ளார்.

இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை இரண்டு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை பகல் 2.00மணியளவில் வந்தடைந்தார். 

சாதனை நீச்சல் பயணத்தில் 32கிலோ மீற்றர்  தூரமுடைய பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.

தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.

 இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ள மதுஷிகன் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன்; இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இவர் நீந்தி சாதனை படைத்துள்ள நிலையில் அவரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜா கலாவதி மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பல்வேறு தரப்பனரும் குறித்த மாணவனை வரவேற்று கௌரவப்படுத்தினார்கள்.

தவேந்திரன் மதுஷிகன் தனது நீச்சல் திறமையினை சாதனையாக மாற்றுவதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள், கடல் சார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒஷியன் பயோம் என்ற அமைப்பு மற்றும் தனது பெற்றோர்களான தந்தை தங்கையா தவேந்திரன்,  தாய் அகல்யா ரோஷினி ஆகியோர் ஊக்குவிப்பதாக நினைவு கூர்ந்தார.