10,863 பேருக்கு 9"A" சித்தி!!


பரீட்சை திணைக்களத்தினால் நேற்று (25) வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரபரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை 231,982 பேர் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை கடந்த ஆண்டு டிசம்பரில் இடம்பெற்றிருக்க வேண்டிய போதிலும், கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் கடந்த மே மாதம் இடம்பெற்றன. இதன் பெறுபேறுகளே தற்போது வெளியிடப்பட்டன.

இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7,129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியதோடு, ஒரு இலட்சத்து 10,367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17,496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர்.

இவர்களில் 231, 982 பேர் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் 10,863 பேர் அனைத்து பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றுள்ளனர். அத்தோடு 498 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமான இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கக் கூடிய தினம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் பரீட்சை சான்றிதழ்களை பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மூலம் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சாத்திகளின் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் விரைவில் அதிபர்களுக்கும், ஏனையோருக்கு அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.