மாற்றத்திற்கான இளைஞர்கள் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “இளைஞர்களின் ஊடாக சமாதானத்தினை ஏற்படுத்தல்” எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தலைமைத்தும் மற்றும் முறன்பாடுகளை தீர்க்கும் தந்திரோபாயம் தொடர்பான வதிவிடப் பயிற்சியின் ஆரம்ப வைபவம் இன்று (03.10.2022) திருகோணமலை மாவட்டத்திலுள்ள சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இதே போன்றதொரு வதிவிடப் பயிற்சியானது கடந்த ஆவணி 12 மற்றும் 13ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 46 தமிழ் மொழி மூல இளைஞர்களுக்கு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பயிற்சி செயலமர்வானது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள மூவின இளைஞர்கள் 45 பேரை ஒன்றிணைத்து நடாத்தப்பட்டு வருகின்றது இப்பயிற்சி வதிவிடப்பயிற்சியாக இன்று மற்றும் நாளையதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆரம்ப நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் திரு.சின்னத்தம்பி ரவிகுமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வானது அகம் மனிதாபிமான வள நிலைய நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.கண்டுமணி லவகுசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் திரு.அ.மதன், வளவாளர் திரு எம்.மிருனாளன் மற்றும் திட்ட உத்தியோகத்தர் திரு.த.அரவிந்தன் கலந்து கொண்டிருந்தனா.; இவ் நிகழ்வினை திட்ட இணைப்பாளர் செல்வி. நாகேஸ்வரன் மிரேகா நெறியாழ்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களது ஆரம்ப உரையில் இன்று எமது சமூகத்திலுள்ளவர்கள் பலவகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு தங்களது சமூகத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் கைகொடுத்து உதவ வேண்டும் என்பதுடன், இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை என்பது ஓர் முக்கிய பிரச்சினையாகவும் சமூகத்தினை அழிவிற்கு கொண்டு செல்லும் விடயமாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனவே இளைஞர்களாகிய நீங்கள் எமது சமூகத்தின் முக்கிய பாத்திரம் என்பதால் சமூக செயற்பாட்டாளர்களாகவும், முன்மாதிரியானவர்களாகவும் திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டு சென்றனர்.
