பண்டாரியாவெளி நாககட்டு நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்


(ரஞ்சன்)

கிழங்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்றதும் தேசத்து பொங்கல் நிகழ்வினை நடாத்தும் ஆலயமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு,பண்டாரியாவெளி நாககட்டு என அழைக்கப்படும் பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாகர் காலத்து வழிபாடுகளைக்கொண்டதும் இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்களின் பண்டைய வழிபாடுகளுடன் தொடர்பை உடையதுமான பண்டாரியாவெளி நாககட்டு என அழைக்கப்படும் பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீநாகதம்பிரான் ஆலயமானது வரலாற்றுரீதியாகவும் தமிழர்களின் பண்பாட்டு ரீதியாகவும் மிகவும் பழமையானதாகும்.

நேற்று கிரியைகளுடன் ஆரம்பமாகிய உற்சவத்தின் ஆரம்பத்தின் இன்று அதிகாலை கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.அதிகாலை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் புடைசூழ கொடிச்சீலை கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேத,நாத,தாள இசை முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஒன்பது தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பட்டிப்பளை,அம்பிளாந்துறை,அரசடித்தீவு,கடுக்காமுனை,மகிழடித்தீவு,பண்டாரியாவெளி,படையான்டவெளி ஆகிய கிராம மக்களினால் திருவிழாக்கள் நடாத்தப்படும்.

எதிர்வரும் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேசத்து பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் அன்றிரவு பால்பழம் வைத்தல் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

மறுதினம் சனிக்கிழமை அதிகாலை தீர்த்தோற்சவமும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

இந்த உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.