ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

பொன்.நவநீதன்
தலைநகர் கொழும்பில் கடந்த 9ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து காத்தான்குடிடியில் ஆர்ப்பாட்டமென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இன்று (11) திகதி பி.ப 5 மணியளவில் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

"வேண்டும் வேண்டும் ஊடக சுதந்திரம் வேண்டும்", "ஊடக சுதந்திரத்தை பறிக்காதே", "அடிக்காதே அடிக்காதே ஊடகத்திற்கு அடிக்காதே", "பிரதமர் இல்லத்தின் முன் தாக்கப்பட்ட நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளருக்கு நீதி வேண்டும்", "ஊடகத்தையும் உணர்வுகளையும் ஒடுக்க நினைக்காதே", "ஜனநாயகத்தின் நான்காவது தூணை நசுக்க நினைக்காதே", "ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்து", "அரசே தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கு" போன்ற வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தியவாறும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியும், ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பவற்றை அடிப்படையாக கொண்ட கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.