சமன்பிட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா

சோளர் ஆட்சிக்கு உட்பட்டதும், பழம் பெரும் இராசதானிகளை கண்டதுமான பொலன்னறுவை, சமன்பிட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று (13) வெகு விமர்சியாக  இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள பழம்பெரும் சக்தி ஆலயங்களில் ஒன்றாகவும், வடமத்திய மாகாணத்தில் உள்ள சகல இன மக்களினதும் வழிபாட்டுக்குரியதுமான சமன்பிட்டி - கறுப்பளை  ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயமானது புனருத்தாருணம் செய்யப்பட்டதனை தொடர்ந்து இம்மாதம்  09 ஆம் திகதி காலை விநாயகர் வழிபாட்டுடன்  மஹா கும்பாபிசேக நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

அதனை தொடர்ந்து கடந்த 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் பெருமளவிலான பக்தர்களின் பிரசன்னத்துடன்  எண்ணைக்காப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன்  6ஆம் நாளாகிய இன்று விசேட யாகபூஜைகள், ஹோமங்கள், மாஹா பூர்ணாகுதி என்பன இடம்பெற்று ஸ்தூல லிங்க அபிஷேகம் மற்றும் மஹா கும்பாபிசேக நிகழ்வுகள் மங்கள இசை முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் இடம்பெற்றன.

பெரிய போரதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு ஆச்சாரிய தீபம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் மற்றும் இலுப்படிசேனை முத்து மாரியம்மன் ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சி.கு. அருட் பிரகாசக் குருக்கள் ஆகியோரின் அருள் ஆசியுடன் மட்டக்களப்பு, கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய  பிரதம குரு தெய்வீக கிரியா ஜோதி சிவஸ்ரீ அருட்பிரகாச லிகிதராஜக் குருக்கள் தலைமையில் இக் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் யாழ்பாணம் கொக்குவில் சாயி துர்க்கா ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சோ.கோகுலதாஸ சர்மா, களுவாஞ்சிச்குடி ஸ்ரீ சீதாராம் சனாதன் தர்மபீட ஸ்தாபகர் சிவஸ்ரீ ந.திலகேஷ்வரக் குருக்கள், கற்பிட்டி இந்து ஆலயங்களின் பிரதம குரு சிவஸ்ரீ வாமதேவ சிவாச்சாரியார், தம்பங்கடவை சித்திரவேலாயுத ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ சுதன் சர்மா, ஏறாவூர் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு வாமதேவன் குருக்கள், திருகோணமலை திருக்கடலூர் பத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கோபால சசிகர சர்மா, நுவரெலியா ஹென்போல்ட் சிவஸ்ரீ வாசுதேவ சர்மா,  யாழ்ப்பாணம் சிவஸ்ரீ ஞானஅருண் பிரசாத்,  புஸ்சல்லாவ சிவஸ்ரீ சிவகுமாரக் குருக்கள், முனைத்தீவு சிவஸ்ரீ பி.கஜேந்திரக் குருக்கள், திருக்கேதீஷ்வரம் மாளிகைத் திடல் சிவஸ்ரீ க.கணிஷ்ரன் குருக்கள், புத்தளம் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மோ.சவிதர குருக்கள், களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ புண்ணிய கிருஷ்ணகுமார குருக்கள், திருக்கோயில் சிவ ஸ்ரீ ஜெயப் பிரசாந் சர்மா சிவஸ்ரீ தற்புருஷ சிவாச்சாரியார், மற்றும் சிவஸ்ரீ கோபால கிரிதரக் குருக்கள் உள்ளிட்டவர்களுடன் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த குருமார்கள் இக் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

மேலும் இவ் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி சங்காபிஷேகத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து  எதிர்வரும் 26 ஆம் திகதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பூசகர்களான வைரன் செல்வம் மற்றும் பேரின்பம் ஜெயமோகன் ஆகியோரின் தலைமையில் திருச்சடங்கானது ஆரம்பமாகவுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.