ஆனந்தகிரி அறப்பணி சபையினால் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விசேட மரநடுகை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலன திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் '' ஆளுக்கொரு மரம் நடுவோம் இயற்கையை நேசிப்போம் '' எனும் நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விசேட மரநடுகை நிகழ்வானது 07.06.2022 ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை கிரிக்கட் மைதான வளாகத்திலும், மட்டக்களப்பு கருவேப்பங்கேணி கோல்டன ஈகிள் விளையாட்டு மைதான வளாகத்திலும் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் திருக்கொன்றை, புளிய மரம், புங்கைமரம், கத்தா மரம், வேம்பு மரம், நிழல் வாகை, மயிலை மரம், இலுப்பை மரம் முதலான 250 ற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. 

இம்மரநடுகை நிகழ்வில் மட்டக்களப்பு வனபரிபாலன திணைக்களத்தின் வட்டார வன அதிகாரி திரு. ஏ.வசந்தகுமார அவர்களும், வன விரிவாக்கல் உத்தியோகத்தர் திரு.ஆர்.நவீன் அவர்களும், மட் - கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி அதிபர் திரு.எஸ்.சாந்தகுமார் அவர்களும், கல்லூரியின் மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் திரு.லோ.தீபாகரன், செயலாளர் திரு.நே.பிருந்தாபன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இணைப்பாளர் திரு.நே.ஜனார்த்தனன், பொதுச்சபை உறுப்பினர் திரு. தரணிராஜ், கோட்டைமுனை விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு மரங்களை நடுகை செய்தனர். இன்றைய காலகட்டத்தில் மரங்களை அழித்தல், காடழிப்பு முதலான காரணிகளால் இயற்கையின் சமனிலை முழுமையாக பாதிக்கப்படுவதுடன் மழைவீழ்ச்சி குறைவடைந்து புவியில் அதிக வெப்பநிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலைகளை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையானது ஆளுக்கொரு மரம் நடுவோம் இயற்கையை நேசிப்போம் எனும் செயல்திட்டத்திற்கமைவாக மரங்களை பராமரிக்கக்கூடிய இடங்களில் நடுகை செய்து அவற்றை மேற்பர்வைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.