ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரலாறு காணாத வரிசை

 


வி.சுகிர்தகுமார்   

 அம்பாரை மாவட்டத்திலும் எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காண முடிகின்றது.

ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று நண்பகல் முதல் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரலாறு காணாத  அளவிற்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ வாகன உரிமையாளர்கள் இரு வரிசைகளில் காத்திருந்ததுடன் நண்பகல் முதல்; பெற்றோலை வழங்கும் செயற்பாடுகள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.


ஆயினும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களைவிட இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் தமது சேவையினை துரிதமாக முன்னெடுப்பதுடன்; காலமறிந்து அதிகளவான ஊழியர்களை கடமையில் இருந்தி எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை விரைவு படுத்துவதனால்  அதிகமான பொதுமக்கள் விரைவாக எரிபொருளை இங்கு பெற்றுச் செல்வதை  காணமுடிகின்றது.

எனினும் மின்சாரம் தடைப்பட்டதன் விளைவாக எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் சற்று தாமதமானாலும் பின்னர் ஜெனரேட்டர் மூலமாகவும் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

எது எவ்வாறாயினும் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையானது பொதுமக்கள் மத்தியில் விசனத்தை உண்டுபண்ணியுள்ளதுடன்  மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.