ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சர்க்கரைப் பொங்கல் சக்தி விழா நாளை ஆரம்பம்!!


மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த சர்க்கரைப் பொங்கல் சக்தி விழா நாளை 19.04.2022 மாலை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து அம்மன் எழுந்தருளி வந்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் 18 ஆவது மைல்கல்லில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓந்தாச்சிமடம் பாலத்தினூடாகப் பயணிக்கும் ​போது வாவிக்கரையை அண்டியதும் எதிரே கடல் அமைந்துள்ளதுமான இயற்கைச் சூழலில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அருகினிலே மரவிருட்சங்களுடன் கூடிய இரு மணித்தூண்களுக்கிடையில் இராஜகோபுரம் கொண்டதாக ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலயத்துடன் கூடிய ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

மானிட வாழ்வில் வளமும் நலமும் காண அருள் புரிபவளே மாரியம்மன். ஏழு நாட்கள் கொண்ட தமிழர் பாரம்பரிய முறையான ஆகமமுறை சாராத வழிபாட்டிற்குரிய பூஜை விதிமுறைகளையும் அதற்கான மந்திரங்களையும் பாவனை முறைகளையும் தொகுத்துக் கூறும் ஆவணமான பத்தாசி முறைச் சடங்காக இதன் விழா நடைபெறும்.

மாரியம்மன் பத்தாசியானது சர்க்கரைப் பொங்கலிடும் சடங்காகக் காணப்படுகின்றது.

ஓந்தாச்சிமடத்தில் அமையப்பெற்ற ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதிபராசக்தியான ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் சக்தியானவள் ஆதிமூலமாக அமைந்து கற்பக்கிரகத்தினிலே மூலமூர்த்தியாக கோலம் கொண்டு அருளாட்சி செய்கின்றாள்.

கி.பி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எமது அண்டை நாடான பாரத நாட்டிலிருந்து கதிர்காமத்திற்கு கப்பல் மூலம் யாத்திரை செல்ல வந்தவர்களால் துணையாக கொண்டுவரப்பட்ட சக்தியே சிவமுத்துமாரியம்மன் என்பது வரலாறு ஆகும். ஆலய மூலஸ்தானத்தின் எதிரே அமைந்துள்ள தீர்த்தக் கிணற்றுக்கும் கதிர்காமம் மாணிக்க கங்கைக்கும் இடையே தொடர்பு உள்ளதாக ஐதீகம் நிலவுகின்றது.

பிணி தீர்க்கும் தீர்த்தமாகவும் இக்கிணற்று நீர் பாவிக்கப்படுகின்றது. குறித்த கிணற்றினுள் பாரம்பரிய கல்வெட்டு காணப்படுவது இதற்குச் சான்றாக உள்ளது.

ஓந்தாச்சிமடம் கிராமத்தில் முதன் முதலில் ஆரம்பமான இப்புனித பதியானது சிவனால் அம்மையே என அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் புனித பதியாகிய காரைக்காலிலிருந்து கொண்டு வரப்பட்டு ஓந்தாச்சி என்னும் நாமத்தைக் கொண்ட சக்தியின் தொண்டனால் உருவாக்கப்பட்ட மடத்தினிலே நிலைநிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல்வர். அங்கு வழிபடப்பட்டு வந்த தெய்வமே சிவமுத்துமாரியம்மன்.

ஓந்தாச்சி என்பவர் கொடை வள்ளலாகவும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்தும் ஏனைய மதங்களை மதித்தும் வாழ்ந்த சிற்றரசனாக மதிக்கப்படுகின்றார். மடம் என்று அழைக்கப்படும் ஆலயத்தின் முன்னே நீர்ச்சுனை அமைத்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களை தங்க வைத்து உபசரித்தும் வந்தார்.

இந்த ஆலயத்திலே பண்டைய காலம் முதல் சிவனின் அம்சமாக மாரியம்மனைக் கருதுவதனால் சிவ வழிபாட்டை முன்னிலைப்படுத்தி சிவராத்திரி விரதமும் சக்தி வழிபாட்டை முன்னிலைப்படுத்தி சர்க்கரையமுதும் மாரியம்மன் பத்தாசி முறையில் செய்து வருகின்றனர்.

1957 இல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆலயத்தின் அருகாமையில் குடியிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த போது ஊரில் உள்ள மக்களின் நலன் மற்றும் மாணவர்களின் கல்வி உயர்வு கருதி சமூகப் பணியாக கிராமத்தின் கல்வி மேம்பாட்டிற்காக அந்த நிலத்தை ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் நன்கொடையாக வழங்கினர்.

அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞானம் எனும் அருள் ஒளி தரும் அன்னையின் சடங்கினிலே 20.04.2022 புதன் மற்றும் வியாழக்கிழமை (21) காலை, மதியம் விசேட பூஜையைத் தொடர்ந்து மாலை ஊரின் பிரதான வீதிகளைக் காவல் பண்ணல் இடம்பெறும்.

இவ்வேளையில் வீதிகள் தோறும் மங்கலப் பொருட்களைக் கொண்டு பூரண கும்பம் வைத்து அம்மனை வரவேற்று தரிசிப்பர். வெள்ளிக்கிழமை(22) காலை மற்றும் மதியம் விசேட பூஜையைத் தொடர்ந்து சர்க்கரைப் பொங்கலுக்காக ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்மக்கள் புடைசூழ வாழைக்குலைகள் எடுத்து வந்து பழுக்கப் போடுதல் இடம்பெறும்.

23.04.2022 சனிக்கிழமை அதிகாலை கும்பம் சொரிதல் நடைபெறும். மாலையில் அம்பாள் முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து வீதிகளில் வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகலில் விநாயகப் பானைக்கு நெல் குற்றுதலும் இரவு விசேட பூஜையும் இடம்பெறும்.

24.04.2022 திங்கட்கிழமை அதிகாலை சக்தி யாகம், அபிஷேகம், பூரண கும்பம் நிறுத்துதல், விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணுதல், காத்தான் கன்னிமார் வைத்தல் நடைபெற்று, மாலையில் காத்தான் கன்னிமார் சகிதம் ஆலயத்திற்கு முன் நிறுத்தப்பட்டு உடுக்கொலி முழங்க கர்ப்பூரச் சட்டி, அங்கப்பிரதட்சணை ஆகியவற்றுடன் ஆலயம் வலம் வருதல் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அம்மனின் மூலஸ்தானத்தின் எதிரே விநாயகப் பானை ஏற்றுவதைத் தொடர்ந்து அடியார்கள் சர்க்கரைப் பொங்கலிடுவர்.

அத்துடன் வருடாந்த சக்தி விழா நிறைவு பெறும். 26.04.2022 செவ்வாய்க்கிழமை இரவு வைரவர் பூஜையும், 29.04.2022 வெள்ளிக்கிழமை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவும் நடைபெற்று அன்னை ஆதிபராசத்தியின் வருடாந்த சடங்குக் கிரியைகள் நிறைவுபெறும்.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குரு தலைமையில் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பி.கஜேந்திரக் குருக்கள் தலைமையில் நடைபெறும். உதவிக்குருவாக விஸ்வப்பிரம்மஸ்ரீ வி.விஸ்வரூபன் கடமையாற்றுவார்.