அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை அருள்மிகு பெரிய பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

 


வி.சுகிர்தகுமார்   

அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை அருள்மிகு பெரிய பிள்ளையார் ஆலய (ஸ்ரீ சித்திவிநாயகர் மகாதேவஸ்தானம்) சித்திரா பௌர்ணமி பிரம்ம மகோற்சவ திருவிழாவின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் பெரிய பிள்ளையார் ஆலயத்தின் ; சித்திரா பௌர்ணமி பிரம்ம மகோற்சவம ;04ஆம் திகதி வாஸ்த்து சாந்தி கிரியைகளுடன் ஆரம்பமாகி 05ஆம் திகதி இன்று நடைபெற்ற கொடியேற்றம் 14ஆம் திகதிவரை இடம்பெறும் திருவிழாக்கள்  15ஆம் திகதி இடம்பெறும் தேரோட்டம் 16ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடனும் 17 ஆம் திகதி இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல்;; பூங்காவனத்திருவிழா, 18ஆம் திகதி ஸ்ரீ வைரவர் பூஜை, 19ஆம் திகதி இடம்பெறும் ஐயனார் பூசையுடனும்; நிறைவுறும்.
 
இன்று காலை கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் கிரியைகளும் வழிபாடுகளும் சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்களின் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்று அங்கிருந்து கொடிச்சீலை அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தை அடைந்து பெரிய பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.

பின்னர் அங்கு யாகபூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கான விசேட பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த எம்பெருமான் சித்தி விநாயகர் சகிதம் ஏனைய பரிவார மூர்த்திகளும் கொடியேற்றம் இடம்பெறும் இடத்திற்கு பக்தர்களினால் தூக்கிச் செல்லப்பட்டு அமர்த்தப்பட்டார்.

தொடர்ந்து கொடியேற்றமானது பக்தர்களின் அரோகரா வேண்டுதலுக்கு மத்தியில் மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றதுடன் கொடிதம்பத்திற்கான பூஜைகளும் நடைபெற்றன.

ஆலய தலைவர் மு.கு.வடிவேல் தலைமையில் இடம்பெறும் சித்திரா பௌர்ணமி பிரம்ம மகோற்சவ திருவிழாவின்  கிரியைகள் யாவும்; உற்வசகால பிரதமகுரு பிரதிஷ்டா இளவரசன் பிரதிஷ்டா கலாநிதி தற்புருச சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் சர்வ சாதகாசிரியராக சிவஸ்ரீ ந.கு.பத்மநிலோஜ சிவம் கலந்து கொண்டார்.

ஆலயத்தின் வரலாற்றில் முதற்தடவையாக 15ஆம் திகதி தேரோட்டம் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.