மட்டக்களப்பில் சுவீனம் காரணமாக மரணமடைந்த இளம் ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு, துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் (34வயது) நேற்று இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் காலமானார்.
இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும்,தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்த இவர் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள்,கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைப்படடதாரியாகவும் பல்துறைக் கலைஞராகவும் உள்ள இவருக்கு கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டிருந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இன்று மாலை ஞாயிற்றுக்கிழமை மாலை துறைநீலாவணை பொது மயானத்தில் நடைபெற்றது. இதில் இறுதி அஞ்சலி உரையினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பிலும் அம்பாறை மாவட்ட ஊடக சம்மேளனம் சார்பிலும் அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டளர்கள்,பொது அமைப்புகள் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அன்னாரின் மறைவு கவலைக்குரியது.அவரின் இழப்பானது கிழக்கு மாகாண ஊடகத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்துவிடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துறைநீலாவணையினைச் சேர்ந்த ஊடக நண்பனான பாக்கியராசா மோகனதாஸ் இயற்கை எய்தினார் என்ற செய்தி எம்மையும் மீளா துயரில் தள்ளியுள்ளது.
இவர் ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் ஆகிய எமது ஊடக அமைப்புகளில் உறுப்பினராக இருந்ததுடன் எமது ஊடக அமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தோலோடு தோல் கொடுத்து செயற்பட்டார்.
கிழக்கில் உள்ள ஊடக நண்பர்களுடன் எப்போதும் எளிமையாக பழகும் ஒரு பண்புள்ள மனிதராக அவர் திகழ்ந்தார்.ஊடகத் துறை மீது இவருக்கு இருந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இவர் பல பத்திரிகைகள், இணையத்தளங்கள் என்பவற்றில் ஊடகவியலாளராக பணியாற்றினார்.
இதன் போது அவர் கிழக்கில் இருந்து பல செய்திகளை உலகின் பார்வைக்கு கொண்டு சேர்த்திருந்தார்.ஒரு இளம் ஊடகவியலாளராக இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்து அதன் ஊடாக பல செய்திகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வந்தார்.
இவர் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் பிரதிநிகளின் பேட்டிகள், கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்து பல்துறைக் கலைஞராக திகழ்ந்தார்.
இவரது ஊடக பணியை பாராட்டி இவருக்கு கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருதும் வழங்கப்பட்டிருந்தது.இவ்வாறு கிழக்கில் ஊடகத்துறை கால் பதித்து, சிறப்பாக வளர்ந்து வந்த எமது ஊடக நண்பரை நாம் இழந்து நிற்கிறோம்.
சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை இரவு (23.04.2022)சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியில் நாமும் இணைந்து கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவு துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஊடக அமைப்புக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.பேனா முனை போராளியான பாக்கியராசா மோகனதாஸ் அவர்களுக்கு எமது கண்ணீர் காணிக்கைகளை செலுத்துகின்றோம்.
ஊடகத்துறை வரலாற்றில் அவரது எழுத்துக்களும், நினைவுகளும் பதிவு செய்யப்பட்டு அவர் என்றும் எம்மோடு எம் நினைவுகளில் உயிர் வாழ்வார் என்பதை பதிவு செய்கின்றோம்.