மலையக மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வண்ணங்களாக சித்தரிக்கும் ஓவியக் கண்காட்சியொன்று மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்று வரும் குறித்த ஓவியக் கண்காட்சியானது நேற்றைய தினம் (17) திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
"தேயிலை சாயம்" எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் இவ் ஓவியக் கண்காட்சியில் மலையகத்தைச் சேர்ந்த 40 கலைஞர்களால் எடுக்கப்பட்ட 45 ஆயிரம் படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்கள் ஓவியங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஊவா சக்தி நிலையம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஓவியக் கண்காட்சியானது இதன் ஒருங்கிணைப்பாளரான லகிறு கித்துலகம தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
மலையக தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தினை சித்தரிக்கும் இந்த கண்காட்சியின் ஊடாக மலையக மக்களின் வாழ்கைத்தரம் அவர்களது உணவு பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஏனைய சமூகத்தினர் மத்தியில் கொண்டு சேர்ப்பதுடன், தெளிவுபடுத்துவதனையும் நோக்காகக் கொண்டு இந்த ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.