மட்டக்களப்பு- கொக்குவில் பகுதியில் அதிபரின் சடலம் மீட்பு...!!


மட்டக்களப்பு- கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் வீதிக்கு அருகில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிசார் சம்பவ இடத்துக்கு இன்று காலை 6 மணியளவில் சென்ற பொலிசார் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளதுடன் ஒரு மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியில் வசிக்கும் 53 வயதுடைய ஆரையம்பதி நவரெட்ணம் வித்தியாலய அதிபரான செபநாயகம் மங்களச்சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.