குறிஞ்சியூர் வாரிசுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது.

(பொன்.நவநீதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாமுனை கிராமத்தில் பிறந்து வசித்துக் கொண்டிருக்கும் சிறிதரன் குலேந்திரன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2021ம் ஆண்டிற்கான இளங்கலைஞர் விருதினை பெற்றுக்கொள்கின்றார்.

கணிதபாட ஆசிரியரான குலேந்திரன் தனது பதிமூன்று வயதிலே கலைக்குள் நுழைந்து பாரம்பரிய கலைகளில் பாத்திரமேற்றும் ,பழக்கியும் அரங்கேற்றி வருகின்ற கலைஞனாகவும் ,கலை ஆக்கங்களை இயற்றுகின்ற எழுத்தாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

2008ம் ஆண்டு பக்காத்திருடன் எனும் கூத்தின் மூலமாக அறிமுகமாகி சிவலீலை , மார்க்கண்டேயர் , நளமகாராசன் , வீரப்பிரதாபன் , துரோணர் மோட்ஷம் , மாயமோகினி , கர்ணன் வதை ,துரோணர் வில்வித்தை , சத்திய அரிச்சந்திரன் ,வைகுந்தம் , சீரழிந்த குடும்பம் ,படுவான்கரை ஊரவரின் பரிதாபப் பயணம் , குமரப்போடி கொலை , உனக்குமில்லை எனக்குமில்லை , இயமன் போட்ட மருந்து ,கல்லான அகலிகை  போன்ற கூத்துக்களில் பாத்திரமேற்று ஆடியிருக்கின்றார்.

அதேபோல் 17ம் 18ம் போர் , 13ம் 14ம் போர் , அரிச்சந்திரன் நாடகம் , குயலவன் நாடகம் , வைகுந்தம் ,துரோணர் வில்வித்தை , துரோணர் மோட்ஷம் ,கல்லான அகலிகை , கிழமை லோணும் கிரிசைகெட்ட குடும்பமும் ,மார்க்கண்டேயர் , நொண்டி நாடகம் ,சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்துக்களை நாட்டுக்கூத்துக் கலைஞர்களுக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் , பல்கலைக் கழக மாணவர்களுக்கும் பழக்கி அரங்கேற்றியும் உள்ளார்.

அத்தோடு ஏட்டண்ணாவியாராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.கூத்துக்கள் ஆடுவது ,பழக்குவதோடு நின்றுவிடாமல் கூத்துக்களை எழுதுவதிலும் ஆர்வம் செலுத்தி “காலனை வென்ற பாலன்" , “கிழமை லோணும் கிரிசைகெட்ட குடும்பமும்” , “கலியுகக் கள்வர்கள்” போன்ற கூத்துக்களை எழுதியும் உள்ளார். கூத்துக்களோடு மட்டுமின்றி வில்லுப்பாட்டு , காசிய நாடகம் போன்றவற்றையும் எழுதியுள்ளதோடு , குறிஞ்சாமுனை ஸ்ரீ பத்திர காளியம்மன் மீது காவியப்பாடல் , காவடிப்பாடல் , கும்மிப்பாடல் என்பவற்றை இயற்றி “அருளமுதம்” எனும் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

பாடசாலை ரீதியிலான தமிழ்த்தினப்போட்டி , பிரதேச செயலக கலாசார விழாவின் போதான போட்டிகள் ,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகள் போன்றவற்றில் பங்குபற்றி பல வெற்றிச் சான்றிதழ்களுக்கு சொந்தக்காரராகவும் திகழ்கின்றார். 

1994 ம் ஆண்டு பிறந்து இன்றுவரை பல நாடகங்களிலும் நடிகராக செயற்படுகின்ற குலேந்திரன் கணித பாடத்திற்கான புகழ்பெற்ற வளவாளராகவும் ,மேலும் கூத்துப் பயிற்சிப்பட்டறை வளவாளராவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகமாக கலைப் பயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர் ஆன்மீகப்பணி ,சமூகப்பணி என்பவற்றிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றார்.இளம் வயதினிலே சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இவரது கலைச் செயற்பாட்டினை கௌரவித்து 2018ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கலா மன்றம் “கலைச்செம்மல்” விருதினை வழங்கி கௌரவித்தது.

இவ்வாறான நற்செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் 2021ம் ஆண்டிற்கான இளம் கலைஞர் விருதினை வழங்கி கௌரவிக்கின்றது.