மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவலைத் தடுக்க பிரதேச செலாளர்களுக்கு விசேட ஆலோசனை...!"


மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவலைத் தடுக்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனைகள் மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டது.

மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இன்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 1300 பேர் வரை இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்குள் தொற்றுக்குள்ளானவர்கள் 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் நூற்றுக்மேற்பட்ட நோயாளர்களும், 20 கற்பினித்தாய்மார்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மொத்தமாக மாவட்டத்தில் 40 இற்கு மேற்பட்ட கற்பினித் தாய்மார்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பது அறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இதன் அபாயத்தினை உணர்ந்தவர்களாக அனைத்து நடவடிக்கைகளிலும் செயற்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், தொற்று நோயியல் நிபுணர் வீ.குனராஜசேகரம், பிரதேச செயலாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.