கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை...!!


யுத்த காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள்,நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலம்.அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு பல விடயங்களை நிறைவேற்றினார்கள்.அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும்.அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த புத்தாண்டில் புதுமைகள் பிறந்து வாழ்வு செழிக்கப்பட்டும்,மகிழ்ச்சி தளைத்தோங்க பிரார்த்திக்கின்றேன்.

தனியார் தொலைக்காட்சியின் தீர்வு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தினை அரச பயங்கரவாதம் என்று கூறி மிக மோசமான முறையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடியிருந்தார்.சில பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் நிர்வாக பயங்கரவாதத்தினை மேற்கொள்வதாக கூறியிருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.அந்த விடயம் தொடர்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும்.
பாராளுமன்றத்தில் கூட அவர் நிர்வாக பயங்கரவாதம் என்பதை கூறியிருந்தார்.அதனை தொடர்ந்து பொதுவெளியில் தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபரின் பெயரை குறிப்பிட்டு காணிகளை அபகரிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அவரை நிர்வாக பயங்கரவாதியாக சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
கடந்த 2018ஆம் ஆண்டுதான் அவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அவரை 12வருடங்களாக இவ்வாறன செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார்.அவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்திருந்தார்.அவர் எந்தவித இனவாதமோ,மதவாதமோயின்றி செயற்படும் ஒரு உதவி அரசாங்க அதிபர்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அடித்துவிரட்டி காணிகளை அபகரித்தாக கூறியிருந்தார்.எந்த பாரபட்சமுமின்றி அரச நிர்வாகத்தினை மேற்கொள்கின்ற மாவட்ட நிர்வாகத்தினை இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவது வேதனைக்குரிய விடயம்.
சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் கொண்டுவரப்பட்டது பண்ணம்பல அறிக்கையாகும்.அது வர்த்தமானியல்ல.முன்னாள் அமைச்சர் அஸ்ரப் அவர்கள் இது தொடர்பான பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தார்.அந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.கோறளைப்பற்று மத்தி எட்டு கிராம சேவையாளர் பிரிவுடன் உருவாக்கப்பட்டது.பண்ணம்பல அறிக்கையென்பது யுத்தகாலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகும்.அந்த காலத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரமிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த காலகட்டம்.அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள்,நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலகட்;டம்.அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களை நிறைவேற்றினார்கள்.அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும்.அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் புனானை கிழக்கு பகுதியும் காராமுனையும் உள்ளது.அதன் நிர்வாகமும் வாகரை பிரதேச செயலகம் முன்னெடுத்துவருகின்றது.இதனை கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கின்றனர்.இன்று புனானை கிழக்கு பிரதேசம் கோறளைப்பற்று வடக்கில் இருந்தாலும் ரிதிதென்ற போன்ற சில கிராமங்களில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.அதேபோன்று பல தமிழ் கிராமங்கள் அதில் உள்ளன.கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என கூறும் பல பகுதிகள் முழுக்கமுழுக்க தமிழர்கள் வாழும் பகுதி.
தமிழ் பகுதிகளையெல்லாம் இணைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.மயிலங்கரச்சி கோறளைப்பற்று மத்தியில் காணப்படும் தமிழ் கிராமமாகும்.அப்பகுதி மக்கள் தங்களுக்கு கோறளைப்பற்று மத்தியுடன் நிர்வாக ரீதியாக இருக்கவிரும்பம் இல்லையென்று கடிதம் தந்துள்ளார்கள்.
இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளின் நிர்வாகத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுக்கின்றது. அதனையே மயிலங்கரைச்சி மக்கள் கோருகின்றனர்.
தியாவட்டுவான் இன்றும் கோறளைப்பற்று மத்தியுடனேயே உள்ளது.ஆனால் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் அது கோறளைப்பற்று வடக்குடன் உள்ளதாக கூறுகின்றார்.இதுகூட தெரியாதவராகவே அவர் இருக்கின்றார்.பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் தியாவட்டுவான் கிராம சேவையாளர் பிரிவு எங்கு இருக்கின்றது என்று கேட்டுதெரிந்தாவது பேசியிருக்கவேண்டும்.
நிலத்தொடர்பு இல்லாமல் மட்டக்களப்பில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கூறியிருந்தார்.நிலத்தொடர்புபற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எந்த அருகதையுமில்லை.மட்டக்களப்பில் உள்ள நான்கு கல்வி வலயங்கள் புவியியல் ரீதியாக நிலத்தொடர்புடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலேயே முதன்முறையாக புவியியல் தொடர்பு இல்லாமல் முதன்முறையாக கல்வி வலயம் ஒன்றை உருவாக்கிகாட்டியவர்கள் இவர்கள்தான். முஸ்லிம் பகுதிகளை இணைத்து நிலத்தொடர்பற்ற நிலையில் ஒரு கல்வி வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் என்ற போர்வையில் இலங்கை தமிழரசுக்கட்சி இவர்களுடன் இணைந்து பயணிக்கமுடியும்.ஆனால் எமது அரசியல் பயணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை.கடந்த 72வருடமாக எமது தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த இணக்க அரசியல் என்று சென்றுசென்றுகொண்டிருப்பதனால் கிழக்கு மாகாணத்தில் நிலரீதியாக,வளரீதியாக,பொருளாதார ரீதியாக பாதிப்பினை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தியுடன் 240சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த நிலப்பரப்பு எங்குள்ளது.வாகரையின் அரைவாசிப்பகுதியை இணைக்கவேண்டும் என்ற நோக்குடனேயே இவர்களின் செயற்பாடுகள் உள்ளது.தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களை கோறளைப்பற்றுடன் இணைக்கவேண்டும் என்கின்ற பண்ணம்பல அறிக்கையினை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.அதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாரில்லை.நீங்கள் ரிதிதென்ன,ஜயந்தியாய பகுதிகளை கோறளைப்பற்று மத்தியில் நிர்வாகம் செய்கின்றீர்கள்.ஆனால் அங்கிருக்கின்ற எட்டுக் கிராமங்களில் ஆறு கிராமங்கள் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ்க் கிராமங்களாகும்.இவற்றை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை. மக்களும் அதனை விரும்பமாட்டார்கள். 240சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு என இவர்கள் சொல்வது கிட்டத்தட்ட வாகரை பாரம்பரிய தமழர்களின் கிராமங்களை இல்லாமல் செய்கின்ற ஒருவகையான செயற்பாடாகும். இப்படித்தான் நாங்கள் அம்பாறையிலும் திருகோணலையிலும் பலவற்றை இழந்தோம். இது பேசித் தீர்க்க வேண்டிய விடயமல்ல, அதற்கு அவசியமும் இல்லை. இது எங்களுக்கென்றே இருக்கின்ற விடயமாகும். விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து நாங்கள் நிலரீதியாகவும் வள ரீதியாகவும் குறைந்துகொண்டே செல்கின்றோம். 
கோறளைப்பற்று வடக்கிற்குள் இருக்கின்ற காரமுனை பகுதி தொடர்பாக அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள் அவர்கள் அதனை விளங்கிக்கொள்கின்றார்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கூறுகின்றார்.அங்கு முஸ்லிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக சாணக்கியன்கூறுகின்றார்.காராமுனை பகுதியில் சிங்களவர்கள் இருந்ததற்கான எந்த ஆவனங்களும் இல்லை,அப்பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான எந்த ஆவனங்களும் இல்லை.காரமுனை நூறுவீதம் வாகரை பிரதேச மக்களுக்குரிய காணியாகும்.ஆனால் அங்கு வாகரை பிரதேசத்தில் உள்ள ஒரு தமிழ் குடிமகனுக்கும் காரமுனையில் காணியில்லை.கோறளைப்பற்று மேற்கு,மத்தியில் உள்ள சில முஸ்லிம் நபர்கள் அரசியல் செல்வாக்குடன் அத்துமீறி அரச காணிகளை அபகரித்துள்ளனர்.எந்தவொரு தமிழ் குடும்பமும் காரமுனையில் இல்லை.வாகரை பகுதியில் யுத்ததினால் பாதிக்கப்பட்டு அவயங்களை இழந்து வாழ்வாதாரத்திற்கு ஒருதுண்டு காணியும் இல்லாமல் கஸ்டப்படும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் உள்ளன.
இன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் ஏறாவூர் நகருக்குரிய பிரதேச செயலகத்திற்குள் சென்று நிர்வாகம் செய்யவில்லை.மண்முனைப்பற்று பிரதேச செயலகம் காத்தான்குடிக்குள் நிர்வாகம் செய்யவில்லை.ஆனால் இன்று காத்தான்குடி நகரசபை ஆரையம்பதிக்கும் வரி அறவிடுகின்றது.ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.
எங்களிடம் இனவாத நோக்கமில்லை.முஸ்லிம் மக்களுக்குரிய நீதியான நியாயமான விடயங்களை நாங்கள் தட்டிப்பறிக்கவும் இல்லை,தட்டியெடுக்கவுமில்லை.அதற்காக தமிழ் மக்களின் நீதியான நியாயமான கொடுக்கப்படவேண்டிய விடயங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்க தயாரில்லை.அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை.
இதேபோன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வடமுனை,ஊத்துச்சேனை,புனானை மேற்கு,வாகனேரி,கள்ளிச்சேனை இந்த ஐந்து கிராமங்களுடன் 18கிராம சேவையாளர் பிரிவுகளைக்கொண்டதாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உள்ளது.ஆனால் இவர்கள் இந்த ஐந்து கிராமங்களையும் கோறளைப்பற்று மேற்குடன் இணைக்கவேண்டும் என்று கோருகின்றனர்.மறுபகுதியில் வாகரையின் அரைவாசி பகுதியை உடைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும்.இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்க விடயங்கள்.
மேற்குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் தமிழ் பகுதியாகும். கள்ளிச்சையைப்பற்றி பேசுகின்றபோது அதனை பேசி தீர்க்கவேண்டிய அவசியமில்லை.கள்ளிச்சை பிரச்சினை தீர்க்கப்பட்ட விடயமாகும்.கள்ளிச்சையென்பது கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ஓரு பின்தங்கிய பகுதியாகும்.அங்கிருந்த முஸ்லிம் மக்கள் ரிதிதென்ன மற்றும் ஜெயந்தியாய ஆகிய பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர். ரிதிதென்ன மற்றும் ஜெயந்தியாய மகாவலிக்குரிய காணியாகும்.இப்பகுதியில் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.மீள்குடியேற்றம் இல்லை,இடமாற்றம் செய்யப்பட்டனர்.அனைத்து வசதிகளுடன் அவர்கள்இடமாற்றம் செய்யப்பட்டனர்.இன்று கள்ளிச்சை பகுதி மக்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.இந்த விடயத்தில் பிரதேச செயலாளர் மற்றுமு; மாவட்ட அரசாங்க அதிபரை இனவாதியாக காட்டமுற்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்வாறான விடயங்களை வைத்து பேசுவது என்பது இனவாதத்தினை தூண்டும் செயற்பாடாகும்.
எந்த தமிழ் பிரதேசத்தினையுமு; நாங்கள் விட்டுக்கொடுக்க நாங்களும் தயாராகயில்லை,அப்பகுதி மக்களும் தயாராகயில்லை.பொய்யான தகவல்களைகூறி மக்களை ஏமாற்ற அனுமதிக்கமுடியாது.
இனரீதியாக கிழக்கு மாகாணத்திற்குள் உங்களை மாற்றியமைக்கவேண்டும்,கிழக்கு மாகாணத்தினை தனி முஸ்லிம் மாகாணமாக மாற்றவேண்டும்,கிழக்கிஸ்தான் என்ற வகையில் அடையாளப்படுத்தவேண்டும் என்று தூரநோக்குடனான செயற்பாடுகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருகின்றனர்.இது தெரியாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இணக்க அரசியல் என்ற பெயரில் வந்ததன் காரணமாகவே பல்வேறு இழப்புகளை இந்த சமூகம் எதிர்கொண்டது.
தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அரசகாணிகளை பாதுகாத்தார்கள்.ஒரு துண்டுக்காணிகள் கூட அபகரிக்கப்படவில்லை.ஆனால் கடந்த காலத்தில் மாற்று சமூகத்தினை சேர்ந்தவர்கள் அரசியல்செல்வாக்கினை வைத்துக்கொண்டு பெருமளவான அரசகாணிகளை அடைத்துவைத்துள்ளனர்.ஆனால் காணிகளை பாதுகாத்த மக்கள் அரை ஏக்கர் காணியை கூட அமைக்கவில்லை.
காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய மூன்று பிரதேசத்தில் ஒருகுறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் மட்டுமே முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் இல்லையெனவும் பொய்யான கருத்துகளை இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர்.
இன்று காத்தான்குடி நகரசபையில் ஒரு தமிழ் உறுப்பினர் இல்லை.ஆனால் ஏறாவூர்ப்பற்று,மண்முனைப்பற்று,மட்டக்களப்பு மாநகரசபை, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேசசபைகளில் 18முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பிரதேசத்திற்குள் மட்டும் முஸ்லிம் மக்கள் இருப்பது என்றால் இந்த 18 உறுப்பினர்களும் எவ்வாறு வந்தார்கள்.பொய்யான கருத்துகளை தெரிவித்துவருகின்றார்கள்.
இன்று ஓட்டமாவடி பிரதேசசபை இருப்பது தமிழர்களின் மயான காணியில்.இதேபோன்று காளிகோவிலை உடைத்து ஓட்டமாவடி மீன்சந்தையினை கட்டினேன் என ஹிஸ்புல்லா தெரிவித்தார்.மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை பயன்படுத்தி இதனைச்செய்ததாக கூறுகின்றார்.அதற்காக நீதிபதியையே மாற்றினேன் என்று கூறுகின்றார்.வடகிழக்கினை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறுகின்றார்.இது என்ன பயங்கரவாதம் என்பதை கேட்கவிரும்புகின்றேன்.