புதிய ஆண்டில் பல்வேறு கஸ்டங்களுடன் வாழும் மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் திருமலை வீதியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று கோப் பிறஸ் கூட்டுறவு விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.உதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,கூட்டுறவு அபிவிருத்தி ,வாழ்வாதார மீன்பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் வி.தங்கவேல் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் இந்த கோப் பிறஸ் கூட்டுறவு விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பெருமளவான பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.