நிர்வாக எல்லைகள் பிரிக்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. - பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்


மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை இணைத்து எல்லைகள் பிரிக்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.  

மண்முனைப்பற்றின் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இணைத்து 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்களுக்கு மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் எமுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிபிடப்பட்டுள்ளது

மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இணைத்து 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக எல்லைகளை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிய முடிகிறது. 

இவ்வாறு குறைக்கப்படுமானால்¸கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக அபிவிருத்திக்கென வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு மக்களுக்கான பொதுவசதிகள் முற்றாக பாதிப்படையும்.

அரச உத்தியோகஸ்தர்களான¸ கிராம உத்தியோகத்தர்¸ சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்¸ அபிவிருத்தி உத்தியோகத்தர்¸ மற்றும் குடும்பநல அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றவர்கள் பதவிகள் குறைக்கப்பட்டு ஆளணி மட்டுப்படுத்தப்பட்டு வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசமானது நகரமயமாக்கலை நோக்கி முன்னேற்றமடையும் வேளையில்¸ இவ்வாறான செயற்பாடுகள் முற்றிலும் நிலைமையினை சீரழிக்கும். இப்பிரதேசத்தின் இராஜதுரைக் கிராமமானது ஆரையம்பதி மத்தியுடனும்¸ ஆரையம்பதி தெற்கு பிரிவானது கோவில் குளம் பகுதியினையும் ஆரையம்பதி மேற்கு பிரிவு ஆரையம்பதி - 01 உடனும் ஆரையம்பதி - 02 பிரிவானது ஆரையம்பதி வடக்குடனும் மற்றும் காங்கேயனோடை தெற்கு பிரிவானது ஒல்லிக்குளத்துடனும் இணையும். இவ்வாறு சேர்க்கப்படும் போது நிர்வாகக் கட்டமைப்பு முற்றாக பாதிக்கப்பட்டு¸ இன¸ சமூக கட்டமைப்புக்கள் மாற்றமடைவதன் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவுகளுக்குரிய தனித்துவ கோட்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் கிராம ரீதியான அமைப்புக்கள்¸ தலைமைத்துவம் என்பவற்றில் பாரிய விரிசலை ஏற்படுத்தும். இது சமூகத்தின் நிலைபேறான வலுவாக்கத்திற்கு அப்பால்¸ நீண்ட பிரிவினையே ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாது¸ இக் கிராம மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

எனவே இதனை தடுத்து நிறுத்தி தற்போதுள்ளவாறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.