மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பரப்புக்கடந்தான் கிழக்குப் பகுதியில் உள்ள தோட்டக் காணியொன்றில் இறந்த நிலையில் காட்டு யானை ஓன்று இன்று (15) காலை கிராம மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை கிராம மக்கள் உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையின் உடலை மீட்டனர்.
இதன் போது உயிரிழந்த குறித்த யானை சுமார் 35 வயதுடைய பெண் யானை எனத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட மாகாண வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி உயிரிழந்த யானையின் உடலை மீட்டு சடலப் பரிசோதனைகளை மேற்கொண்டார். இதன் போது குறித்த யானை சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார இணைப்பில் அகப்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.