அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்ற இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலையம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகணத்திற்கான முதல் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்சினி பெனார்ந்தோபுள்ளே தலைமையில் இன்று (02) மட்டக்களப்பு வாழைச்சேனையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 125 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள இப்பயிற்சி நிலையத்தில் நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள், நிருவாகக் கட்டிடம், கேட்போர் கூடம், ஆண், பெண் இருபாலாருக்குமான தங்குமிட விடுதிகள், விளையாட்டு மைதானம், சமயலரைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளடங்கியுள்ளன.
இந்தொழில் பயிற்சி நிலையத்தில் தையல் ஆடை உற்பத்தி மற்றும் மின் பாவனைப் பொருள் திருத்துதல் போன்ற பயிற்சிகள் முதல் கட்டமாக இன்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெனார்ந்தோபுள்ளேவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 40 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் தங்கி கற்பதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சி நிலையத்தில் இரண்டு வருடங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறியினைத் தொடரும் 18 வயதுக்கும் 35 வயதிற்குமிடைப்பட்ட வலதுகுறைந்த மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிட வசதி உட்பட பயிற்சிக் காலம் வரைக்கும் நாளொன்றுக்கு 150 ரூபா கொடுப்பணவும் வழங்கப்படவுள்ளது.
பயிற்சிநெறி நிறைவில் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 6 மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் கற்றுக் கொண்ட தொழிலை மேற்கொள்வதற்கான உபகரணத் தொகுதியும் இலவசமாக வழங்கி வைக்கப்படவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெனார்ந்தோபுள்ளேவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்ட இத்தொழில் பயிற்சி நிலையம் நாட்டின் 9ஆவது பயிற்சி நிலையமாகவும் கிழக்கு மாகாணத்திற்குரியதுமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சுனேத்ரா குணவர்தன, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், சமூக சேவை திணைக்களப் பணிப்பாளர் சந்தன ரணவீர ஆராச்சி, சிறுவர் நிதியத்தின் முகாமையாளர் நாளக ஸ்ரீவர்தன, பிரதேச செயலாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளால் பயன்தரு மா மரக் கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.