மாநகரசபை உறுப்பினர் அமரர் தவராஜாவுக்கு மாநகரசபையில் அஞ்சலி –கட்சிக்கொடியும் போர்த்தப்பட்டு அஞ்சலி


மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினரும் எழுத்தாளரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமான அமரர் வேலுப்பிள்ளை தங்கராஜாவின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினராகவும் முன்னாள் ஆசிரியராகவும் இருந்து தமிழ் தேசியத்திற்கும் கல்வித்துறைக்கும் அரும்பணியாற்றிய தவராஜா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுகவீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.

அன்னாரின் பூதவுடன் கறுவப்பங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் இலங்கை தமிழரசுக்கட்யின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா தலைமையில் கட்சிக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து அஞ்சலி உரைகள் தமிழரசுக்கட்சியின் சார்பில் நடாத்தப்பட்டது.

அஞ்சலியை தொடர்ந்து அன்னாரது பூதவுடல் மட்டக்களப்பு மாநகரசபைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மட்டக்களப்ப மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து உடலம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மட்டக்களப்பு கல்வியங்காடு இந்துமயானத்தில் பெருமளவானோர் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.