சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஓசியன் ஸ்டார் லங்கா மற்றும் ஓசியன் ஸ்டார் ரஸ்ட், யு.கே ஆகிய நிறுவங்களின் பங்களிப்பின் ஊடாக மகாதேவன் அறக்கட்டளை நிதி அனுசரணையில் சிறுவர்களுக்கான பவளம் ரட்ணம் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் நடைபெற்றது.
மாவட்ட ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவன உதவி பணிப்பாளர் சாலினி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக அருட்பணி பிரைனர் செல்லர் அடிகளார் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார், மண்முனை வடக்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், ஆசிரிய ஆலோசகர் ஜி.கிருஷ்ணமூர்த்தி உட்பட கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச அபிவிருத்தி குழுதலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன் அடிக்கல்லினையும் நாட்டிவைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவன உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் உடல், உளநல மற்றும் கல்வி மேம்பாட்டினை அபிவிருத்தி செய்யும் வகையில் ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவனமானது சிறுவர்கள் சார்ந்த சமூக அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.