போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது...!!


போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்து, விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் மூவரை கைதுசெய்துள்ளனர்.

ஆட்டுப்பட்டித் தெருவின் பாமசி தோட்டம், வத்தளை மற்றும் தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 50,41,40 வயதுகளை உடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

வத்தளை மற்றும் தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களின் வீடுகளில் வைத்தே இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து காலவதியான சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் 361, போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதி அட்டைகள் 50 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் தயாரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஒருவகை பொலித்தீன்களும், நான்கு ஸ்கேன் இயந்திரங்களும், கனிணி உபகரணங்கள், ஆவணங்கள் எனபனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.